1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (16:37 IST)

மாநகராட்சியாக மாறியது ஆவடி: பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், தூத்துகுடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் ஓசூர் ஆகிய 14 நகரங்கள் மாநகராட்சியாக இருக்கும் நிலையில் தற்போது 15வதாக சென்னையின் புறநகர் நகரங்களில் ஒன்றான ஆவடியும் மாநகராட்சியாகியுள்ளது. 
 
ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளையும், நெமிலிச்சேரி, வானகரம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளையும் இணைத்து தமிழகத்தின் 15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஒன்றான ஆவடியில்தான் இந்திய ராணுவத்திற்கு டாங்குகளை தயாரித்து வழங்கும் ஆலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் செங்கல்பட்டு மாவட்டத்திலும், அதன்பின்னர் திருவள்ளூர் மாவட்டத்திலும் இருந்த ஆவடி, கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்த நகரங்களில் ஒன்று. ஆவடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிக தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இருந்ததே இந்த அதிவேக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்
 
ஆவடியை மாநகராட்சியாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி என ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்கள் தங்கள் நகரம் மாநகராட்சியாக மாறியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.