1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (09:44 IST)

தேர்தல் பணியில் நயன்தாராவை களம் இறக்கத் திட்டம்

தேர்தல் பணியில் நயன்தாராவை களம் இறக்கத் திட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக நயன்தாரா உட்பட பல நடிகைகளை கொண்டும், விழிப்புணர்வு குறும்படங்கள் தயாரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது,


 

 
இது குறிதுது ராஜேஷ் லகானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
 
அதை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான திருவிழாக்கள், வார சந்தைகள் ஆகிய இடங்களில் மக்கள் வாக்கு அளிப்பதின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
 
மேலும், கடந்த தேர்தல்களில் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது என்று கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
 
இதற்காக தேர்தல் அதிகாரி, ஆசிரியர், கிராம நிர்வாக அதிகாரி ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்த குழுவினர் மக்களிடையே ஓட்டுப்போடுவதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
 
இதுதவிர ஓட்டுப்போடுவதின் அவசியம் குறித்த பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்படும். ஆட்டோ, வேன்களில் ஒலி பெருக்கி பொருத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
 
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் 16 ஆம் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு முன்பாக 2 நாட்கள் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ளமாட்டார்கள்.
 
அந்த நாட்களில் தேர்தல் கமிஷன் சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
 
தற்போது அனைத்து கல்லூரிகளிலும் வாக்கு அளிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இதைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை கொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்த குறும்படங்கள் சினிமா தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
 
அடுத்து நடிகைகள் சுருதிஹாசன், சமந்தா, நடிகர் சித்தார்த் ஆகியோரை கொண்டு குறும்படங் கள் தயாரிக்கப்பட உள்ளன. 
 
இவர்கள் தவிர நயன்தாரா உள்பட பல நடிகைகளை கொண்டும், விழிப்புணர்வு குறும்படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
 
சட்டசபை தேர்தல்கள் நடக்கும் தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இந்திய தேர்தல் கமிஷனர் தலைமையில் நடக்கிறது.
 
இதில் நான் கலந்து கொள்கிறேன். அப்போது சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக எத்தனை கம்பெனி துணை ராணுவப் படையினர் தேவைப்படுவார்கள் என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது. 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது 240 கம்பெனி துணைராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது 140 கம்பெனி துணை ராணுவப்படையினர் பயன்படுத்தப்பட்டனர். 
 
எனவே இந்த தேர்தலுக்கு தேவைப்படும் துணை ராணுவப்படையினர் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எப்போது தமிழகம் வருவார்கள்? என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஒரு கம்பெனியில் 72 துணை ராணுவப்படையினர் இடம் பெறுவார்கள்.
 
வருகிற 15 ஆம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
 
அதன்பின்னர் 16 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளேன்.
 
தமிழக தேர்தல் கமிஷன் இணையதளத்தின் தரம் மேம்படுத்தப்படும். தமிழகத்தில், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக இதுவரை 466 பேரும், வாகன அனுமதி கேட்டு 156 பேரும், ஊர்வலம் நடத்த 76 பேரும், புதிய கட்சி அலுவலகம் திறக்கக்கோரி 14 பேரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு ராஜேஷ் லகானி கூறினார்.