வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (13:17 IST)

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்; அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி விவகாரத்தை இன்று மதியம் அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
 

 
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது, வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் என்பவர் ஆஜராகி, தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அவர்களை போலீசார் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். ஜனநாயக ரீதியாக மாணவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் ஆயுதங்களுடன் சென்று மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
 
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன். அந்த வழக்கை இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
 
இதற்கு நீதிபதிகள், மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டமும் சரியானது கிடையாது. அவர்கள் கடைகளை எல்லாம் அடித்து நொருக்கியுள்ளனர். அனைத்து விவரங்களையும் பத்திரிகைகள் மற்றும் டி.வி. சேனல்கள் வெளியிட்ட செய்திகளில் நாங்கள் பார்த்தோம்.
 
எனவே, இதுதொடர்பாக அவசர வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. வேண்டுமென்றால், மனு தாக்கல் செய்யுங்கள். எப்படி பிற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோமோ, அதுபோல இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
 
இதையடுத்து இன்று மனுவை தாக்கல் செய்வதாக வழக்கறிஞர் கூறினார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.