1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (23:52 IST)

”என்ன உதவினாலும் கேளுங்க.. - மூதாட்டிக்கு காலணி அணிவித்த டிராபிக் போலிஸ்!

வெயிலில் வந்த மூதாட்டிக்கு காலணி வாங்கி கொடுத்து அணிவித்த போக்குவரத்து தலைமை காவலரை தாம்பரம் காவல்துறை ஆணையர் பாராட்டியுள்ளார். 
 
வெறும் காலில் நடந்து வந்த மூதாட்டியின் நிலை அறிந்து காலணி வாங்கி கொடுத்த போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவி.
 
சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் கடந்த 28ம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும் வெயிலில் நடந்து வந்த வயதான மூதாட்டியை பார்த்துள்ளார். மூதாட்டியும் வெயிலின் தாக்கத்தினால் போக்குவரத்து போலிஸார் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார். போக்குவரத்து போலிஸார் மூதாட்டியை பார்த்ததும் கையில் இருந்த 20 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
 
பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி வெயில் அதிகமாக உள்ளதால் கால் சுடுவதாக கூறியுள்ளார். இந்த பேச்சைக் கேட்ட போக்குவரத்து தலைமை காவலர் சிறிது நேரத்தில் ஒருவரை அனுப்பி காலணி வாங்கி வந்து மூதாட்டிக்கு அணிவித்து அனுப்பி வைத்தார். மூதாட்டியோ இரு கைகூப்பி வணங்கி சென்றார். எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன் என மூதாட்டியிடம் போலிஸார் கூறியுள்ளார்.
 
இந்த செய்தியறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
 
உங்களது பணி காவல் துறைக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருப்பதாகவும், தொடர்ந்து இதே போன்று செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.