1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (17:33 IST)

இப்படியும் சொல்லலாம், அப்படியும் சொல்லலாம் - பட்ஜெட் குறித்து விஜயகாந்த்

இப்படியும் சொல்லலாம், அப்படியும் சொல்லலாம் - பட்ஜெட் குறித்து விஜயகாந்த்

பட்ஜெட்டை பொறுத்தவரையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருங்கே உள்ளடக்கிய பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் 2016 - 2017 பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து 35,984 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதும், புதிய நீர்நிலை ஆதாரங்களை உருவாக்கி விவசாய விளை நிலங்கள் அதிகரிக்கப்படும் என்றும், வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்த நாளன்று திறக்கப்படும் என்று அறிவித்திருப்பதும், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிக்கு 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க அம்சங்கள்.
 
கிராமப்புற மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான சிறப்பு காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்திருப்பதும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டு மையங்கள் அதிகரிக்கவும், சிறு, குறு தொழில் முனைவோருக்கு வருமான வரிவிலக்கு ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக அதிகரித்திருப்பதும், 2018க்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும் என கூறியிருப்பதும், புகையிலை பொருட்களுக்கு வரியை உயர்த்தியிருப்பதும் இந்த பட்ஜெட்டின் வரவேற்கத்தக்க அம்சங்களாகும்.
 
இந்தியா என்பது விவசாயம் சார்ந்த நாடு, இங்கே பெரும்பகுதி விவசாயிகள் வறட்சியிலும், வறுமையிலும் வாழ்ந்து வருகிறார்கள். அதன் விளைவாக அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், அவர்களின் வருமானம் இருமடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அண்மையில் பேசியது விவசாயிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.
 
ஆனால், இந்த பட்ஜெட்டில் அதற்கேற்றாற்போல் புதிய திட்டங்களோ, விவசாய பயிர் விளைச்சல் பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குவது குறித்தோ, விவசாயிகளும், சாமான்ய மக்களும் பயன்பெறும் வகையில் விவசாய விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதற்குரிய திட்டமோ, விவசாய விளைபொருட்களுக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்வது குறித்தோ, எந்தவித அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வேதனையை தருகிறது.
 
பிரதமர் ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே, ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நதிகள் இணைக்கப்படுமென்று கூறினார். ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது கவலையளிக்கிறது.
 
அதே சமயத்தில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த கறுப்பு பண மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படாததும், வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்திருந்த வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு உயர்த்தப்படாததும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருங்கே உள்ளடக்கிய பட்ஜெட்டாகவே இதை பார்க்க முடிகிறது. மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜெட் வேகத்தில் செயல்படுத்தி, மக்களின் டார்கெட்டை பூர்த்தி செய்யவேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.