வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2015 (19:49 IST)

மேம்பாலம் கட்டியதற்காக நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள் - கருணாநிதி

மேம்பாலம் கட்டிய குற்றத்திற்காக, நள்ளிரவில் என்னை வீட்டிற்குள் படுக்கையறை வரை நுழைந்து கைது செய்து சிறையிலே அடைத்தார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சியில் மேம்பாலங்கள் எதுவும் கட்டப்படவே இல்லை என்ற புகார் குறித்து சற்று விரிவாகவே கூறுகிறேன். முதல்வர் ஜெயலலிதா 28-9-2015 அன்று தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அன்றாடம் படிக்கும் அறிவிப்புகளில் ஒன்றாக மேம்பாலம் பற்றிய அறிவிப்பு ஒன்றினையும் செய்திருக்கிறார்.
 
அதில், "மாநிலத்தின் தொழிற் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களின் சிரமத்தை நீக்கும் வகையிலும், கால நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பைக் கருத்திற்கொண்டும், மேற்படி சந்திக் கடவுகளுக்கு மாற்றாக எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பைப் படித்த போது கழக ஆட்சியில் இந்த சென்னை மாநகரில் ஏற்படுத்தப்பட்ட சாலை மேம்பாலங்களைப் பற்றிய நினைவுகளும், அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டன என்ற கேள்விகளும் என் மனதிலே எழுந்தன.
 
உதாரணமாக, அண்ணா மறைந்த பிறகு, அண்ணா சாலையில் 1973ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதன் முதலாக அண்ணா மேம்பாலம் ஏற்படுத்தப்பட்டு, நான்தான் அதனைத் திறந்து வைத்தேன்.
 
அதனைத் தொடர்ந்து நான்காவது முறையாக அமைந்த திமுக ஆட்சியில், ஸ்டாலின் 2000ஆம் ஆண்டில் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, சென்னை மாநகரில் பத்து மேம்பாலங்கள் கட்ட முடிவெடுத்து, அவற்றில் ஒன்பது மேம்பாலங்களைக் கட்டி முடித்து, நான்தான் அந்த மேம்பாலங்களையெல்லாம் முதலமைச்சர் பொறுப்பிலே இருந்தபோது திறந்து வைத்தேன்.
 
சென்னை மாநகரில் அப்போது நான் திறந்து வைத்த மேம்பாலங்கள், அடையாறு, காந்தி மண்டபம், ஆழ்வார்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை (மியூசிக் அகாடமி), டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை (சிட்டி சென்டர்) ,பீட்டர்ஸ் சாலை (ராயப்பேட்டை மருத்துவமனை), பீட்டர்ஸ் சாலை (சரவணபவன் ஒட்டல்), எழும்பூர் (மியூசியம் அருகில்), புரசைவாக்கம் (டவுட்டன்) ஆகியவையாகும்.
 
இந்தப் பாலங்களைக் கட்டியதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால், இந்தப் பாலங்கள் மதிப்பிடப்பட்ட தொகையை விடக் குறைந்த செலவிலேயே, மிகக் குறுகிய காலத்திலே கட்டி முடிக்கப்பட்டன. அடித்தள மண் சரியில்லாத காரணத்தால், குறித்த காலத்தில் திறக்கப்படாமல் இருந்த பெரம்பூர் பாலமும், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபோது கட்டி முடிக்கப்பட்டு என்னாலேயே திறந்து வைக்கப்பட்டது.
 
ஐந்தாவது முறையாகக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னை மாநகராட்சியின் சார்பாக நான்கு மேம்பாலங்கள், அதாவது ஜி.கே. மூப்பனார் பெயரால் அமைந்துள்ள மேம்பாலம், கோமதி நாராயணச் செட்டித் தெருவில் அமைந்துள்ள மேம்பாலம், கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் அருகில் அமைந்துள்ள உஸ்மான் சாலை மேம்பாலம், தியாகராயநகரில் குமரன் ஸ்டோர்ஸ் அருகில் உள்ள மேம்பாலம் ஆகியவை கட்டப்பட்டு, அந்த நான்கு மேம்பாலங்களையும் திறந்து வைத்தேன்.
 
மத்தியில் டி.ஆர். பாலு, தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, மீனம்பாக்கம் எதிரில் உள்ள சாலை மேம்பாலம், கத்திப்பாராவில் உள்ள மிகப் பெரிய மேம்பாலம், கோயம்பேட்டில் அமைந்துள்ள மேம்பாலம், பாடியில் உள்ள மேம்பாலம்,புழல் மேம்பாலம், பூவிருந்தவல்லியில் உள்ள மேம்பாலம் ஆகியவைகளும் மத்திய அரசினால் குறிப்பாக கழகத்தின் சார்பில் இடம் பெற்ற டி.ஆர்.பாலுவின் முயற்சியினால் அமைந்த பாலங்களாகும்.
 
வேளச்சேரி அருகில் காமாட்சி மருத்துவமனை அருகில் அமைந்துள்ள சாலை மேம்பாலம் திமுக ஆட்சியிலேதான் கட்டப்பட்டது. ஆக மொத்தம் திமுக ஆட்சியில் சென்னை மாநகரில் மட்டும் 22 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டன.
 
நான் கேட்கிறேன், இந்த ஐந்தாண்டு காலத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு சென்னையில் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலங்கள் எத்தனை? சொல்லத் தயாரா? இருந்தால் அல்லவா சொல்வதற்கு? ஆனால் மேம்பாலம் கட்டிய குற்றத்திற்காக, நள்ளிரவில் என்னை வீட்டிற்குள் படுக்கையறை வரை நுழைந்து கைது செய்து சிறையிலே அடைத்த ஆட்சியினர்தான் தற்போது தமிழகத்தை ஆளுகிறார்கள் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
 
2011-2012ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின்படி, அதிமுக அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பெயரால் வெளியிடப்பட்ட விவரப்படி, சென்னைப் பெருநகரப் பகுதியில் ரூ. 291.50 கோடி மதிப்பில் 5 பல்வழிச் சாலை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்தன.
 
திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, நடைபெற்று வந்த 5 பல்வழிச் சாலை மேம்பாலங்கள் எவையெவை என்று பார்த்தால், 34.72 கோடி ரூபாய் மதிப்பில் போரூரில் மேம்பாலம்; மூலக்கடை பகுதியில் 49.55 கோடி ரூபாயில் ஒரு மேம்பாலம்; அண்ணா நகர் 2வது நிழற்சாலை மற்றும் திருமங்கலம் முகப்பேர் சாலை - உள்வட்ட சாலை சந்திப்பில் 60.23 கோடி ரூபாயில் ஒரு மேம்பாலம்; வடபழனியில், உள்வட்டச் சாலை - என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் 30 கோடி ரூபாயில் ஒரு மேம்பாலம்; பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மற்றும் அண்ணா வளைவில் அண்ணாநகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைத்து 117 கோடி ரூபாயில் ஒரு மேம்பாலம் என ஐந்து மேம்பாலங்களின் பணிகள் கழக ஆட்சி முடிவுற்ற போது நடைபெற்று வந்தன.
 
கடந்த நான்கரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த ஐந்து பாலங்களில் ஒன்றைக் கூட முடிக்கவில்லை. ஆனால் இந்த ஐந்து பாலங்களில் மூலக்கடையிலும், திருமங்கலம் - அண்ணா சாலை சந்திப்பிலும் உள்ள இரண்டு மேம்பாலப் பணிகளும் முடிவுறும் தறுவாயில் உள்ளன.
 
இதனைத் திறந்து வைப்பதற்கான தேதியைக் கூடக் கொடுக்க ஆட்சியினர் முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
ராஜீவ் காந்தி சாலையில் உள்ள திருவான்மியூர் - தரமணி சாலை சந்திப்பு, தரமணி - எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, பெருங்குடி சாலை (அப்பல்லோ மருத்துவமனை) சந்திப்பு, தொரப்பாக்கம் - பல்லாவரம் சாலை சந்திப்பு, சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு ஆகிய ஐந்து சந்திப்புகளை மேம்படுத்துவதற்காக திமுக ஆட்சியில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
 
ஆனால் ஒதுக்கப்பட்ட அந்த நிதி அதிமுக ஆட்சியிலே செலவழிக்கப்படாமல், தொடர்ந்து மூன்றாண்டு காலமாக நிதி ஒதுக்கப்பட்டு வந்தும்கூட, செலவழிக்கப்படாமலே இருந்து, இந்த ஆண்டு நிதியே ஒதுக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஐந்து சாலை மேம்பாலப் பணிகளையும் அதிமுக ஆட்சியில் கை விட்டு விட்டார்கள் என்பதுதான் உண்மை.
 
மாறாக 110வது விதியின் கீழ் மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து சிறுசேரி வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அறிவிப்போடு சரி; அந்தப் பணியும் இதுவரை செய்யப்படவில்லை.
 
2015-2016ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், பக்கம் 117இல் சாலை மேம்பாலங்கள் என்ற தலைப்பில், துவங்கப்பட வேண்டிய பணிகள் என்ற துணைத் தலைப்பில், பல்லாவரத்தில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ஒரு மேம்பாலம் 80.74 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் 98.22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவகர்லால் நேரு சாலையில் கோயம்பேட்டில் காளியம்மன் கோயில் தெரு சந்திப்பு மற்றும் சென்னை புறநகர் பேருந்து நுழைவு வாயில் சந்திப்புகளை இணைத்து ஒரு மேம்பாலம் 93.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலுமாக மூன்று திட்டங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
 
குறிப்பாக இந்த மூன்று திட்டங்களையும் கடந்த மூன்றாண்டு காலமாகத் தொடர்ந்து குறிப்பிட்டு வந்த போதிலும், இதில் எந்தவொரு திட்டத்தையும் தொடங்கவே இல்லை என்பதுதான் உண்மை'' என்று தெரிவித்துள்ளார்.