வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 20 மே 2016 (17:57 IST)

அரவக்குறிச்சி- தஞ்சையில் மூன்று வாரங்களுக்கு தடை

அரவக்குறிச்சி- தஞ்சையில் மூன்று வாரங்களுக்கு தடை

தமிழகத்தில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில் வாக்குபதிவுக்கு மூன்று வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

அவரக்குறிச்சி தொகுதியில்  வாக்காளர்களுக்கு வழங்க இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய வேட்டி-சேலை மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
மேலும், அய்யம்பாளையத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் ரூ.4.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் கரூர் வீடு, அவருக்கு சொந்தமான லாட்ஜ் மற்றும் அவரது மகன் கே.சி.சிவராமனுக்கு சொந்தமான சென்னை வீடுகளில் திடீர் சோதனை நடத்தி ரூ.1.98 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
 
ஆளும் அதிமுக, திமுக ஆகியவற்றைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஆகியோருக்கு சொந்தமான மற்றும் நெருக்கமானவர்களுக்குத் சொந்தமான இடங்களில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இதனால் அரவக்குறிச்சியில் தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறாது என தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, அரவக்குறிச்சி தொகுதியில் மே 16 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் மே 23ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.
 
இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு ஓட்டுக்கு திமுக மற்றும் அதிமுக சார்பில் பணம் வழங்கப்பட்டது. 
 
எனவே, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி, அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து. மீதமுள்ள 34 வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதுவரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும், வாக்களர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவு இடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வேட்பாளர் பாஸ்கரன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணையில் உள்ளது.
 
இந்த நிலையில், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறாது என்றும்,  3 வாரங்கள் கழித்து எந்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்பதை அத்தொகுதி வேட்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து, ஆலோசனைக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.