1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (17:51 IST)

₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு தந்த தூய்மை பணியாளர்களுக்கு மாமன்ற கூட்டத்தில் பாராட்டு!

கோவை மாநகராட்சி, கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார்.
 
இந்நிலையில், கடந்த மாதம் சிவகாமி தனது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 பவுன் தங்க செயினை தவறுதலாக குப்பைகளோடு குப்பையாய் கொடுத்துள்ளார். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளான சிவகாமி, இந்த சம்பவம் குறித்து தனது நண்பர் சக்திவேலிடம் தெரிவித்துள்ளார்.
 
சக்திவேல், குறிச்சி பகுதி 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் கவுன்சிலர் உதயகுமார், உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கான துப்புரவு மேற்பார்வையாளர் மணிகண்டனை தொடர்பு கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பேரில், குப்பை வண்டியில் ஏற்றப்பட்டிருந்த டன் கணக்கான குப்பைகளை கீழே இறக்கி, ஆறு மணி நேர தீவிர தேடுதலுக்கு பின் தவறவிடப்பட்ட 6 பவுன் தங்க செயின் மீட்கப்பட்டுள்ளது.
 
இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட, ராணி, சத்யா சாவித்திரி ஆகிய தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
 
இது குறித்து 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் கூறுகையில்.....
 
நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் மாமன்ற கூட்டத்தில், அவர்களது பெயர்கள் கூறப்பட்டு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களாலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன என்று கூறினார்.