முதல்வர் சகஜமாக பேசி வருகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
முதல்வர் சகஜமாக பேசி வருகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, சென்னை அப்பல்லோ நிர்வாகம், புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதியிலிருந்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். நீர்ச்சத்து குறைபாடு, சுவாச பிரச்சனை ஆகிய இருப்பதாக இதற்கு முன் வெளிவந்த அப்பல்லோ அறிக்கைகள் கூறின.
கடைசியாக கடந்த 10ம் தேதி, அப்பல்லோ தனது கடைசி அறிக்கையை வெளியிட்டது. அதில் முதல்வருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால், அவர் மருத்துவமனையில் இன்னும் பல நாட்கள் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 10 நாட்களாக, மருத்துவமனை சார்பாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று ஒரு புதிய அறிக்கையை அப்பல்லோ தற்போது வெளியிட்டுள்ளது. இது அப்பல்லோ வெளியிடும் 10வது அறிக்கையாகும்.
அந்த அறிக்கையில் “முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பிசியோதெரபி, இதய, சுவாச சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் எங்களிடம் சகஜமாக பேசி வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.