ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (09:54 IST)

இந்தி எதிர்ப்பால் திமுக வீழ்ச்சியை காணும்; காலம் மாறிவிட்டது! – அண்ணாமலை அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று இந்தி திணிப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு நேற்று சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை “இந்த தீர்மானத்தால் ஒன்று ஆகப்போவது இல்லை. தமிழக அரசின் இருமொழிக் கொள்கை என்ன ஆங்கிலம் கட்டாயம், தமிழ் கட்டாயம் இல்லை என்பதுதானே? அதனால்தான் தமிழ் படிக்காமலே ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளீர்கள்” என்று கூறியுள்ளார்.


மேலும் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் பலவற்றில் உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பயிற்று மொழியாக உள்ளதாக சுட்டிக்காட்டி பேசியுள்ள அண்ணாமலை, தமிழக அரசு இந்தி மேல் மட்டும் பாகுபாடு காட்டுவதாக கூறியுள்ளார்.

“இந்தி எதிர்ப்பு 1967ல் திமுகவை அரியணையி ஏற்றியது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இந்தி எதிர்ப்புதான் திமுகவின் வீழ்ச்சிக்கும் காரணமாக ஆக போகிறது” என கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K