1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 14 மே 2015 (16:45 IST)

பாமகவை தவிர எந்தக் கட்சியாலும் மதுவை ஒழிப்போம் என சொல்ல முடியாது - அன்புமணி ராமதாஸ்

பாமகவை தவிர எந்தக் கட்சியாலும் மதுவை ஒழிப்போம் என சொல்ல முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
 
வேலூர் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திரளான மகளிர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
 
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெண்கள் திரளானோர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பாமக நடத்தவுள்ளது. வேலூரில் நடத்தப்படுவது 3-ஆவது ஆர்ப்பாட்டம். இது ஆர்ப்பாட்டம் என்பதை விட மாநாடாக நடைபெறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
 
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. நாட்டில் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான இளம் விதவையர் உளளனர். அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நடைபெறும் மாநிலமும் தமிழகம்தான். தமிழகத்தில்தான் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நடைபெறுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் கொள்ளைகள், 2 ஆயிரம் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தேறியுள்ளன.. இவற்றுக்கு காரணம் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள்தான்.முன்பு மது அருந்துவோர் வயது 30-ஆக இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு 12 வயது சிறுவர்களும் கூட மது அருந்தும் அவல நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
 
நாட்டில் மதுப் பழக்கத்தால் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 2 லட்சம் பேர் தமிழகத்தில் மட்டுமே இறக்கின்றனர் என்பதை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 32 சதவீதத்தினர் மது அருந்துவதும் மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.இதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.இது அரசியல் பிரச்னையல்ல. சுகாதாரப் பிரச்னை என்பதோடு தமிழகத்தின் வளர்ச்சி பிரச்னையாக உள்ளது. மதுவின் மூலம் மக்கள் பணம் ரூ.26 ஆயிரம் கோடியை சுரண்டி, அதன் மூலம் இலவசங்களைத் தந்து தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. இதற்கு அதிமுக மட்டுமல்ல, திமுகவும் காரணமாக உள்ளது.
 
பெரியாரும், அண்ணாவும் மது விற்பனைக்கு எதிராக இருந்தார்கள். ஆனால் அண்ணாவின் பெயரால் உள்ள கட்சி மதுவிற்பனைக்கு ஊக்கம் அளித்து வருகிறது. 1971-ல் கருணாநிதிதான் முதலில் மதுவை தமிழகத்தில் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, திமுக என மாறிமாறி தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டி மக்களின் உழைப்பை சுரண்டி வருகின்றன.
 
2016-ல் பாமக நிச்சயமாக ஆட்சிக்கு வரும். அப்போது அதன் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் உத்தரவாக இருக்கும். இந்த உறுதிமொழியை திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்த கட்சிகளும் சொல்ல முடியாது என்றார் அன்புமணி ராமதாஸ்.
 
பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம், மாநில துணைப் பொதுச் செயலர் கீ.லோ.இளவழகன், மாநில மகளிர் அணி துணைச் செயலர் வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.