வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (17:11 IST)

பிரபல தொலைக்காட்சி சி.இ.ஓ என்னிடம் தவறாக நடந்து கொண்டார் - வரலட்சுமி டிவிட்

ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.


 

 
சமீப காலமாக பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதில் நடிகைகளும் தப்பிப்பதில்லை. நடிகை பாவனாவை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது. இந்த விவகாரம் சினிமா திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
ஒரு பிரபல தொலைக்காட்சி தலைமை அதிகாரியுடனான ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். கூட்டம் முடிந்த பின் என்னிடம் பேசிய அவர், நாம் வெளியே சந்திக்கலாமா? எனக் கேட்டார். ஏதாவது வேறு வேலை தொடர்பாகவா? என நான் கேட்டேன். அதற்கு அற்பமாக சிரித்து விட்டு, இல்லை, இல்லை, வேறு விஷயத்திற்காக இல்லை..  மற்ற விஷயத்திற்காக எனக் கூறினார். 
 
எனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி, கோபம் இரண்டையும் மறைத்துக் கொண்டு, மன்னிக்கவும், இங்கிருந்து கிளம்புங்கள் என்றேன். அவர் உடனே.. அவ்வளவுதானா? என சிரித்தபடி கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
 
இதுபற்றி நான் வெளியே கூறினால், சினிமா இப்படித்தான்.. தெரிந்துதானே இந்த துறைக்கு வந்தாய் என்பார்கள். பாலியல் தொல்லைக்கு உடபடுத்துவதற்காக நான் இங்கே வரவில்லை. சினிமாவில் நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அதையே தொழிலாக எடுத்துக் கொண்டேன்.
 
திரையில் நான் கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதற்காக என்னை மோசமாக நடத்த வேண்டும் என்பதில்லை. பெண் எது போன்ற ஆடை அணிய வேண்டும் என போதிப்பதை விட, பெண்களை எப்படி மதிக்க வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 
 
பெண்களை அவமானப்படுத்துவது எல்லா மட்டத்திலும் நடக்கிறது. பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிர்றது. நாம் கற்கும் கல்வியும் இதுபற்றி பேசுவதில்லை. எனவே, இதுபற்றி பேச பெண்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்காக நான் பேசுகிறேன்.
 
இப்போதும் அதுபற்றி பேசாவிட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கனவாகிவிடும். பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.