ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (12:34 IST)

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது.! வி.சி.க அறிவிப்பு..!!

Prakash Raj
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு  ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கி வருகிறது.
 
மறைந்த முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலருக்கு இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கி உள்ளது.
 
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மொழிக்கு வழங்கப்படுகிறது.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது அறிவித்துள்ளனர். இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர் விருது அறிவித்துள்ளனர். பேராசிரியர் ராஜ்கௌதமனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது அறிவித்துள்ளனர். 

 
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மேனாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தர் அவர்களுக்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்படும். கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலு அவர்களுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படும். விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அடுத்த மாதம் 25ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.