ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (16:23 IST)

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வாஸ் அவுட்.! 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி முகம்..!!

Dmk Won
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும்  திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
 
மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன. ஆனால் அதிமுக வேட்பாளர்கள் யாரும் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
 
இருப்பினும் அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்தார். அதே போல் பாஜக கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி முன்னிலையில் இருந்து வந்தார். 
 
இந்த இரண்டு தொகுதிகளிலும் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனும், தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியும் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளனர்.


இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.