வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 18 மே 2016 (13:53 IST)

உஷார் நிலையில் சென்னை: வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க தயார் நிலையில் மீட்புப் படை

கடந்த டிசம்பர் மாதம் சென்னையை புரட்டி போட்டது மழை வெள்ளம். தேசமே சென்னைக்காக சோகக்கண்ணீர் வடித்தது. அதன் காயம் மாறும் முன்னர் மீண்டும் மழை சென்னையை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது.


 
 
கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த சென்னை வாசிகள் இந்த மழையால் சற்று நிம்மதியடைந்தாலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை மீண்டும் ஒரு வெள்ளத்தை சந்திக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
 
சென்னையில் பல பகுதியில் தொடர் மழை பெய்து வருகின்றது. வட தமிழகத்தில் மேலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
 
கடந்த முறை வெள்ளத்தின் போது, சேதம் ஏற்பட்டபின் மீட்புக்குழுவினர் மக்கள் மீட்க வரவழைக்கப்பட்டனர், இதனால் பல உயிர்கள் மாண்டன. இதனால், தற்போது கனமழை எதிரொலியால், மீட்புப் படையினரை முன்கூட்டியே வரவழைக்கப்பட்டுள்ளனர்.
 
அரக்கோணம், நெல்லுாரிலிருந்து மீட்புக் குழுவினர் 270 பேர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் குழுவுக்கு 46 பேர் என மொத்தம் 6 குழுக்கள் பிரிக்கப்பட்டு, மணப்பாக்கம், நந்தனம், மணலி, வேளச்சேரி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர் புரம் ஆகிய இடங்களில் படகுகளுடன் தயார் நிலையில் மீட்புக்குழு உள்ளது.
 
மேலும், கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2,460 கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் சோழவரம் ,பூண்டி ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சென்னை வாசிகள் பீதியில் உள்ளனர்.