வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (17:01 IST)

அதிமுகவில் மீண்டும் பங்காளி சண்டை: தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவானது!

அதிமுகவில் மீண்டும் பங்காளி சண்டை: தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவானது!

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியது போல தற்போது தினகரனுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அதிமுகவில் மூன்றாவது அணி ஒன்று உருவாகியுள்ளது.


 
 
டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் முன்னர் அவரை கட்சியில் இருந்து அதிமுக அமைச்சர்கள் ஒதுக்கி வைத்தனர். இதனையடுத்து தினகரனும் தான் ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால் சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்த பின்னர் பேசிய தினகரன் தான் கட்சியில் மீண்டும் தீவிரமாக பணியாற்ற உள்ளதாக கூறினார். மேலும் தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறினார்.
 
இந்நிலையில் தினகரனை அமைச்சர்கள் யாரும் சென்று பார்க்க மாட்டோம் எனவும் அவர் கட்சியில் பணியாற்றுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என சில அதிமுக அமைச்சர்கள் கூறினர். இந்நிலையில் இன்று சசிகலாவை தினகரன் சந்திக்க சென்ற நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினர்.
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் அமைச்சர்கள். அதன் பின்னர் அமைச்சர்கள் அனைவரும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது அமைச்சர்கள் சார்பில் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் ஏற்கனவே தினகரனை ஒதுக்கி வைத்த பின்னர் அவரும் ஒதுங்கி கொள்வதாக, ஆனால் ஜாமீனில் வெளிவந்த தினகரன் தற்போது தான் மீண்டும் கட்சியில் தீவிரமாக பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். அதனால் அது தொடர்பான எங்கள் விளக்கத்தை கொடுப்பது அவசியமாகிறது.
 
நாங்கள் ஏற்கனவே அறித்த மாதிரி தினகரனை கட்சியில் ஒதுக்கி வைப்பதாக அறிவித்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் அது தொடர்கிறது. அவரும் தான் முன்னர் கூறியது மாதி ஒதுங்கி கொள்ள வேண்டும். கிளை கழக தொண்டர்கள் வரை யாரும் தினகரனை சந்திக்கமாட்டார்கள். சசிகலா குடும்பத்துடன் அதிமுக கட்சிக்கோ ஆட்சிக்கோ தொடர்பில்லை என்றார்.
 
ஆனால் தினகரனுக்கு தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஆதரவாக உள்ளனர். இவர்கள் மூன்றாவது அணியாக அதிமுகவில் செயல்பட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தினகரன் அணியில் உள்ள பெரும்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் அமைச்சர்களின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தினகரனை நீக்க ஜெயகுமாருக்கு யோக்கியதை இல்லை என அவர் கூறியுள்ளார்.