”தேர்தலில் தோல்வி என்றாலும், கழகத்திற்கு வெற்றி தான்”.. தோல்வியை ஏற்றுகொள்ளாத அதிமுக
வேலூர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து அதிமுக, கழகத்தை பொறுத்த வரை இது வெற்றி என தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி வேலூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக சார்பாக போட்டியிட்ட கதிர் ஆனந்த், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில் இந்த தோல்வியை குறித்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஏ.சி.சண்முகம் மொத்தம் 4,77,199 வாக்குகள் பெற்று, மிக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். ஆனாலும் இது கழகத்தை பொறுத்தவரை வெற்றி தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல், சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதை வேலூர் தேர்தலில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறைசாற்றுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக இறுதியில் இந்த தேர்தல் பணிக்காக உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு ”நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற எம்.ஜி.ஆரின் பாடலுடன் அந்த அறிக்கை நிறைவு பெறுகிறது.
அதிமுக இந்த தோல்வியை பாஜக-வின் பாணியில் அணுகுகிறார்கள் என இணையத்தள வாசிகள் கூறிவருகிறார்கள். அதாவது பாஜக பல தேர்தல்களில் தோற்ற போதும், ”இது ஒரு வெற்றிகரமான தோல்வி” என்று கூறினர், அதே போல் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவும், “ இது தோல்வி என்றாலும், கழகத்திற்கு வெற்றி” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.