1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:46 IST)

அதிமுக அமைச்சர்கள் ஓட்டம்: ஜெ. மரண விசாரணை கேள்விக்கு பதில் அளிக்க திணறல்!

அதிமுக அமைச்சர்கள் ஓட்டம்: ஜெ. மரண விசாரணை கேள்விக்கு பதில் அளிக்க திணறல்!

நேற்று இரவு திடீரென அதிமுக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர்வதற்கான ஆலோசனை இது என கூறப்பட்டது.


 
 
இரு அணிகளும் ஒன்று சேர்வதற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் கூறியதை அடுத்து சசிகலா அணியில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் நேற்று இரவு கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டில் திடீரென ஆலோசனை நடத்தினர்.
 
இதனால் நேற்று இரவு ஊடகங்கள் பரபரப்பாக காணப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர்கள் கூட்டாக ஊடகத்தினர் சந்தித்தனர். அதில் அதிமுக இரு அணிகள் இணைவது குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என அமைச்சர்கள் கூறினர்.
 
இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும், கட்சி இணைவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்கள், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதாக நிபந்தனை விதித்தாரே, இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுமா என அமைச்சரகள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளிக்காத அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் அப்படி நிபந்தனை விதிக்கவில்லை. உங்களிடமா கூறினார் என செய்தியாளர்களை நோக்கி கேட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள் ஓபிஎஸ் பல்வேறு முறை ஊடகங்களில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என கேட்டதை குறிப்பிட்டு காட்டினர்.
 
இதனையடுத்து பதில் அளித்த அமைச்சர் வேலுமணி ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக்கு பதில் அளிக்காமல் கட்சி இணைவது குறித்து பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இதனையடுத்து மற்ற அமைச்சர்களும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.