திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (11:26 IST)

அதிமுகவை தப்பா பேசுனா நாக்க அறுத்துடுவேன் – அதிமுக அமைச்சர் கொக்கரிப்பு

அ.தி.மு.க. வைப் பற்றி தவறாகப் பேசுபவர்களின் நாக்கை அறுப்பேன் என தஞ்சாவூர் நடபெற்ற கண்டனக் கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் ஆர் துரைக்கண்ணு  ஆவேசமாக பேசியுள்ளார்.

இலங்கை அரசுக்கு போரின்போது உதவி செய்ததாகக் கூறி காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக்கு எதிராக மாநிலம் முழுவதும் நேற்று அதிமுக அரசு சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. சேலத்தில் முதல்வர் பழனிச்சாமியும் தேனியில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வமும் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ‘தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சி நடந்துகொண்டு வருகிறது. அதிமுக அரசைப்பற்றி யாராவது தவறாகப் பேசினால் அவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன்.

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழலை அறிமுகப்படுத்தியது திமுக தான். தினகரன் எங்கள் ஆட்சி இன்று கலைந்து விடும் நாளைக் கலைந்து விடும் என குடுகுடுப்பைக் காரன் போல கனவு கண்டு கொண்டிருக்கிறார்.’ என கோபமாகப் பேசினார்.

நாக்கை அறுத்துவிடுவேன் என அவர் பேசியது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.