1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (13:16 IST)

ஓபிஎஸ் பொருளாளர் பதவி; குறிவைக்கும் முன்னாள் அமைச்சர்கள்! – வேற ப்ளானில் எடப்பாடியார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வரும் நிலையில் பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் நேற்று ஓபிஎஸ்க்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, கடந்த பொதுக்குழுவில் அதற்கு முந்தைய பொதுக்குழுவின் தீர்மானங்கள் புதுப்பிக்கப்படாததால் இனி ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் கிடையாது என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக நமது அம்மா நாளிதழின் நிறுவனர் என்ற பெயரிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.

அடுத்தக்கட்டமாக ஓபிஎஸ்ஸிடம் மீதம் உள்ள கழக பொருளாளர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிசாமி அணி முயற்சித்து வருவதாக தெரிகிறது. ஜூலை 11ல் நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறகு கழக பொருளாளர் பதவியை பெறுவதற்கு எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் ஆர்வம் காட்டி வருவதால் போட்டி அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.