வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (18:00 IST)

இரட்டை இலை இனிமேல் இல்லை?: அதிமுகவை அதிர வைக்கும் இல கணேசன்!

இரட்டை இலை இனிமேல் இல்லை?: அதிமுகவை அதிர வைக்கும் இல கணேசன்!

அதிமுகவின் மிக முக்கிய வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுவது அந்த கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம். எம்ஜிஆர் இறந்த பின்னர் முடக்கப்பட்ட இந்த சின்னத்தை ஜெயலலிதா மீட்டார். இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பின்னரும் தற்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதனையடுத்து கட்சியும் சின்னமும் எங்களுக்கு தான் சொந்தம் என இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இந்த சூழலில் தான் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வந்தது.
 
இதனையடுத்து அதிமுகவின் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுக்கும் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு அணிக்கும் அளிக்காமல் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
 
இதனையடுத்து அதிமுகவின் இரண்டு அணியும் வேறு வேறு சின்னங்களில் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலையில் தற்போது இரண்டு அணிகளும் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்கள் வசப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல கணேசன் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் மறுபடியும் கிடைக்குமா என்பது சந்தேகமே என கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவர் இப்படி கூறி இருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.