வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2015 (11:48 IST)

மது கடைகளை மூடுவதற்கு அதிமுக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

மது கடைகளை மூடுவதற்கு அதிமுக அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
"ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என திமுக தலைவர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்குக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டுள்ளன.
 
இந்நிலையில் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மது கடைகளை மூடுவதற்கு முன்வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
 
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 இல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
 
மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிப்பது தொடர்பான "மதுவிலக்கு விசாரணைக் குழு" வின் பரிந்துரைகளையும், 1963 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி தேக்சந்த் குழுவின் பரிந்துரைகளையும் தற்போதிருக்கும் பாஜக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
 
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளிலிருக்கும் குடும்பங்களில் 56 விழுக்காட்டினர் நிலமற்ற கூலி விவசாயிகள். 79 விழுக்காடு குடும்பங்களுக்கு மாத வருவாய் ரூபாய் ஐந்தாயிரம்கூட இல்லை என்பதை மத்திய அரசு வெளியிட்ட சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.
 
இவ்வளவு மோசமான வறுமையில் தவிக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டுவதாக அரசு மதுக்கடைகள் இருக்கின்றன. அரசாங்கத்தின் இலவசத் திட்டங்கள் ஏழைகளிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்தில் ஒரு பகுதியை மீண்டும் அவர்களுக்கு ஊசிமூலம் செலுத்துவதைப் போன்றதுதான்.
 
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மது விலக்கை வலியுறுத்துகிற நிலையில் இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வரை காத்திருக்காமல் மது கடைகளை மூடுவதற்கு அதிமுக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.