வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 15 நவம்பர் 2015 (10:35 IST)

அதிமுக அரசு பெப்சி நிறுவனத்துடன் "மாபெரும்" ஒப்பந்தம்: கருணாநிதி தாக்கு

அதிமுக ஆட்சியில் பெப்சி நிறுவனத்துக்கு குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், 36 ஏக்கருக்கும், ஆண்டு ஒன்றுக்கு வெறும் 36 ரூபாய் என  98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு "மாபெரும்" ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கேள்வி:- அதிமுக ஆட்சியில் மக்களுக்கு அளிப்பதாகக் கூறப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் வெற்றியா? தோல்வியா?.
 
பதில்:- தமிழகத்தில் ஒரு குடும்பம் அதிமுக அரசிடம் இருந்து பெற்ற இலவசப் பொருள்களின் மதிப்பு 4,500 ரூபாய் என்றால், அவர்கள் அதிமுக அரசுக்கு விலை உயர்வு காரணமாகத் தருகின்ற தொகை 45 ஆயிரம் ரூபாயாகும். இதில் இருந்து அதிமுக அரசினால் மக்களிடம் மொத்தம் சுரண்டப்பட்ட தொகை எவ்வளவு என்று கணக்கிட்டால், 90 ஆயிரம் கோடிகள்.
 
அதிமுக அரசு ஆட்சிக்கு வரும் பொழுது தமிழகத்தின் மொத்தக் கடன் தொகை 1 லட்சம் கோடிகள். அதிமுக அரசின் இந்த 4 வருட ஆட்சியில் தமிழகத்தின் மொத்தக் கடன் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடிகள்.
 
சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் அதிகமாகி இருக்கிறது. மக்களிடம் சுரண்டிய தொகையான 90 ஆயிரம் கோடியும், கடன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடியும் சேர்த்து சுமார் 2 லட்சம் கோடி பணம் செலவழித்ததாக அறியப்படுகிறது.
 
இந்த 2 லட்சம் கோடித் தொகையை எந்தத் திட்டத்திற்குச் செலவு செய்தார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காரணம் இவர்கள் ஆட்சிக்கு வந்து வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
 
கேள்வி:- பணியிலே இருக்கும்போது இறந்து விடும் அரசு அலுவலர் குடும்பத்தின் உடனடித் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த முன்பணம் 5 ஆயிரம் ரூபாய் என்பதை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?.
 
பதில்:- இந்தத் தொகை அரசு அலுவலர் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து வழங்கப்படுவதாகும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்திலேயே சட்டப்பேரவையில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான அரசாணைதான் 1½ மாதங்களுக்குப் பிறகு அதிமுக அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதே நேரத்தில் இந்த அரசில் எதற்கு முனைப்பும், வேகமும் காட்டுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறட்டுமா?. நெல்லை மாவட்டத்தில், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் பரப்பளவில், தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் நீரையெடுத்து அமெரிக்காவின் "பெப்சி" நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்க 20-1-2014-ல் "பெப்சி" குளிர்பான நிறுவனம் அனுமதி கேட்டது.
 
இதற்கு 15 நாளில், தமிழக அரசு 5-2-2014 அன்று அமெரிக்காவின் "பெப்சி" நிறுவனத்திற்கு வரலாறு காணாத வேகத்தில் அனுமதி அளித்து, 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்திற்கு அமெரிக்க "பெப்சி" குளிர்பான நிறுவனம், குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், 36 ஏக்கருக்கும், ஆண்டு ஒன்றுக்கு வெறும் 36 ரூபாய் மட்டுமே என 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். 
 
இதிலே வேடிக்கை என்னவென்றால், 98 ஆண்டுகளுக்குப் பிறகும்; 99 ஆம் ஆண்டில், குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ரூபாய் குத்தகை; 36 ஏக்கருக்கு செலுத்த வேண்டும் என பெப்சி நிறுவனத்துடன் தமிழக அரசு "மாபெரும்" ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
15 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு குத்தகைக்கு அமெரிக்க "பெப்சி" நிறுவனம் செலுத்தும் குத்தகைத் தொகை ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குறைந்து போய் வருகிறது.
 
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து போன நிலையில், பெப்சி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆற்று நீரை தினமும் பல லட்சம் லிட்டர் அளவுக்கு உறிஞ்சினால், தாமிரபரணியை நம்பி வாழும் விவசாயிகளின் எதிர்காலம் அழிந்தே போய் விடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.