வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (18:12 IST)

கால அட்டவணையை வெளியிட்டு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் : வைகோ

தமிழக அரசு கால அட்டவணையை வெளியிட்டு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கோவை மாவட்டம் சிந்தாபுதூரில், மதிமுக சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:
 
ம.தி.மு.க. கட்சி ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை பல்வேறு ஏற்ற, தாழ்வுகளை சந்தித்து விட்டோம். ஆனாலும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் ம.தி.மு.க. போராடி கொண்டு வருகிறது.
 
அதிமுக ஆட்சி அமைத்த பின், தமிழகத்தில் நாள்தோறும் படுகொலைகள் நடந்து வருகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. சென்னை சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை, 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள் வேதனையை தருகிறது. இந்த குற்றங்களுக்கெல்லாம் மதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
 
அ.தி.மு.க. அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என்றும் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் ஆளுங்கட்சியினர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு, கடை மூடியிருக்கும் நேரங்களில், அதை இரண்டு மடங்கு விலையை வைத்து விற்பனை செய்கிறார்கள். 
 
எனவே, கால அட்டவணை வெளியிடப்பட்டு முழு மதுவிலக்கு கொள்கையை அரசு அறிவிக்க வேண்டும்.