1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (11:24 IST)

கரும்பு வழங்காத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் ரேசன் கடைகள் மூலமாக பொங்கல் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அதில் நிறைய விமர்சனங்கள் எழுந்ததால் இந்த முறை இலவச அரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ளனர். 

கரும்பை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாததால் கரும்பு விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்றும், விவசாயிகளிடமிருந்து அரசு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் கரும்பு வழங்காத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜனவரி 2ம் தேதியன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாசிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

Edit By Prasanth.K