அதிமுக-வை கேலி கூத்தாக மாற்றிய சசிகலா: அதிரடி நடவடிக்கை பாயும்; நடிகை லதா ஆவேசம்!!
சசிகலாவின் அவசரத்தாலும் முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்னும் நோக்கதாலும் எம்ஜிஆரின் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது என நடிகை லதா ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் லதா கூறியதாவது, அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையளிக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்க பட்ட கஷ்டங்கள் வீணாகிவிடுமோ என்ற கவலை எனக்கு மேலோங்கி உள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியின் கழக பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும், ஆட்சிமுறை என்று வந்தபோது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஓ.பன்னீர்செல்வம் நல்ல ஆட்சியை கொண்டிருந்தார். ஆனால் அவரை, ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா முதல்வராக அவசரப்படுவதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை.
இந்த அவசரத்தின் விளைவாக தான் கட்சி உடையக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நமது கட்சியினை ஆச்சரியத்துடன் பார்த்த அனைவரும், இன்று கட்சியின் நிலையையும், ஒற்றுமையின்மையும் கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டார்கள் என தோன்றுகிறது.
இந்த கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு என் கடமையை செய்யும் பொருட்டு, அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன் என நடிகை லதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.