ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (13:26 IST)

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கை வேண்டும் - டிடிவி. தினகரன்

dinakaran
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3ஆவது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தங்களது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்கள் பறிபோன கவலையில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளில் மேலும் இருவர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் 150நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தபோதிலும் திமுக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் இன்று வரை வேடிக்கை பார்த்துவருவது கண்டிக்கத்தக்கதாகும்.
 
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதலமைச்சர், ஆட்சிக்கு வந்தபின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையம், சேலம்-சென்னை பசுமை வழி சாலை, சூளகிரியில் 3ஆவது சிப்காட் அமைத்தல் ஆகியவற்றுக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் மனம் போன போக்கில் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர்.
 
விவசாய நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அதனை எக்காரணம் கொண்டும் அழிக்கக் கூடாது என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. ஆகவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3ஆவது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்துகின்றேன்.