1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (09:23 IST)

ஊழியருக்கு கொரோனா… பால் தட்டுப்பாடு ஏற்படுமா? ஆவின் விளக்கம்!

ஆவின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் வெளியான செய்திகளுக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆவின் மேலாண்மை இயக்குனர் வள்ளலார் வெளியிட்டுள்ள அறிக்கை:-

ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்பாகப் பரவிவரும் பொய் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதில் துளியும் உண்மையில்லை. ஆவின் நிறுவனத்தின் புகழையும் நற்பெயரையும் கெடுப்பதற்காக இதுபோன்ற செய்திகளை உலவவிடுகிறார்கள். ஆவின் பால் பண்ணைகளில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருளான பால் இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்படக்கூடாது. அதனால் இந்த இக்கட்டான நேரத்தில், ஆவின் பால் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவின்படி, ஆவின் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவருகிறது.

ஆவின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பண்ணைகளிலும் நுழைவாயிலில், சோதனைசெய்யப்பட்ட பிறகே பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று காலை, மாதவரம் பால் பண்ணை நுழைவாயில் சோதனையின்போது, பால் பண்ணைக்கு வெளியே லாரிகளில் பால் டப்பை ஏற்றும் கடைநிலை பணியாளர் ஒருவருக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அரசு மருத்துவக் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பால் பண்ணையின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி, கிருமிநாசினி மூலம் தினமும் முழுமையாக சுத்தம்செய்யப்படுகிறது. தற்போது, சுத்தப்படுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தின் புகழையும் நற்பெயரையும் கெடுக்கும் வகையில், பொய்யான செய்திகள் பரவிவருகின்றன. பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம். கலப்படமில்லாத தூய பால் வழங்கிவரும் ஆவின் நிறுவனம், போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு தடை இல்லாமல் பால் கிடைக்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது.

இந்த இக்கட்டான நேரத்திலும் உங்களுக்காகப் பணியாற்றுகிறது ஆவின் நிர்வாகம். எனவே, பொய்யான செய்திகளைப் பொருட்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் தரமான பாலை நுகர்வோருக்கு வழங்க, முயற்சிகள் மேற்கொண்டு வரும் ஆவின் நிறுவனத்திற்கு, பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் நல் ஆதரவை வழங்க வேண்டும்.

ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருள்கள் அனைத்தும் பல்வேறுகட்ட தர பரிசோதனைகளுக்குப் பிறகே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தரமான பாலை தடையின்றி வழங்கும் செயலைத் தொடர்ந்து ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும். எனவே, பொய்யான தகவலைப் புறக்கணித்து, பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.