1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 மே 2023 (12:31 IST)

2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட மாபெரும் பலா திருவிழா!

Isha
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
 

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் இன்று (மே 28) நடைபெற்ற மாபெரும் பலா திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு முன்னோடி விவசாயிகள் மற்றும் வல்லுர்கள் பங்கேற்று பலாவில் இருந்து பத்து தலைமுறைக்கு பலன் தரும் வகையில் லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். ஆர்வத்தோடு கலந்துகொண்ட 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் பலன்கள் குறித்தும், பலா மரத்தின் சிறப்புகளையும், மதிப்பு கூட்டல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டனர்.

Isha

 
முன்னோடி பலா விவசாயியும் வேளாண் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான திரு. ஹரிதாஸ் அவர்கள் பேசுகையில், 'பலா விவசாயத்தினால் நானும் என்னைச்சுற்றி உள்ள விவசாயிகளும்  பெற்ற பலன்களை பிறருக்கும் வழங்கிட வேண்டும் என்பதே எனது ஆசை. எல்லோருக்கும் பலா கிடைக்கவேண்டும், எல்லோரும் பலாவை உண்ணவேண்டும். பலாவை இயன்ற அளவு பயிரிடவேண்டும். அதனால் உண்டாகும் பலன்களான உணவு, ஆரோக்கியம், பொருளாதாரம், வாழ்வாதாரம் என எல்லோருடைய கனவையும் சாத்தியப்படுத்தும் பலா. 100 முதல் 150 ரக பலா மரங்களை வளர்த்து வருகிறேன். நமது பண்ருட்டி பலாவிற்கு மட்டும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது அதனுடைய தனிச்சுவையால்தான். பாருக்குள்ளே நல்ல மரம் பலாமரம். அனைவரும் பலாவோடு பயணியுங்கள்' என்றார்.


Isha

 
பலாவில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம், இயந்திரம், சந்தைப்படுத்தல் தலைப்பில் பேசிய டாக்டர் ஜெகன்மோகன் அவர்கள், 'பலாவில் பொதுவாக நாம் உபயோகப்படுத்துவது வெறும் 35% மட்டுமே. பலாச்சுளை மற்றும் பலா விதைகள் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 65 சதவீதத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ந்தோம். அதில் நாங்கள் அறிந்தது, சரியான பக்குவத்தில் பலாவை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி, கேன்சர், தைராய்டு போன்ற பல வியாதிகள் குணமாகும் என்பதை கண்டறிந்தோம். பலாவை பொடியாக்கி கோதுமை மாவில் சேர்த்தால் சர்க்கரை வியாதி குணமாகும். பாயசம், சாஸ், ஐஸ் க்ரீம், ஜாம், ஜெல்லி, என சுவைமிகுந்த பல உணவுப்பொருட்கள் செய்யமுடியும். பலாவை காயவைத்து உலர்பழமாக எடுத்துக்கொண்டால், 2 வருடங்கள் வரையிலும் கூட வைத்துக்கொள்ள முடியும். இதனை 'சைவ கறி'யாக, அதாவது மாமிசத்திற்கு மாற்றாக உட்கொண்டால் உடலுக்கும், சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்,' என்றார்.


Isha

 
சிவப்பு பலாவின் சிறப்புகள் குறித்து பேசிய டாக்டர். கருணாகரன் அவர்கள் பேசுகையில், பலா நமது தேசத்தின் பழம். சமீப காலமாக இதனை நடவு செய்ய விவசாயிகள் பலரும் முன்வருகின்றனர். அனைத்து பலா ரகங்களுமே சத்தானவை என்றாலும், சித்து மற்றும் சங்கரா ஆகிய இரண்டு ரகங்கள் சத்து மிக்க பலா ரகங்கள், என்றும் இந்த சிவப்பு நிறம் மிக்க ரகங்களின் பலன்களையும், சர்க்கரை, கேன்சர் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு மருந்தாக அமைவதையும் விளக்கினார்.  

மேலும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் கருணாகரன், 'சிவப்பு பலாவின் சிறப்புகள்' குறித்தும், முன்னோடி விவசாயி திரு.குமாரவேல் அவர்கள் தென்னைக்குள் பலாவை நட்டு லாபம் எடுப்பது குறித்தும், முன்னோடி விவசாயி திரு. திருமலை அவர்கள் மிளகு சாகுபடி குறித்தும், மதுரையைச் சேர்ந்த திருமதி. ஜோஸ்பின் மேரி அவர்கள் தேனீ வளர்ப்பு குறித்தும் ஆலோசனைகள் வழங்கினர். 

Isha

 
மண் காப்போம் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில், 'ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில், 0.6 சதவீதத்திற்கும் கீழுள்ள நமது மண்ணின் அங்கக கரிம வளத்தை குறைந்தபட்ச அளவான 3 முதல் 6 சதவீதத்திற்கு உயர்த்திட இயற்கை முறையிலான மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறோம். நம்முடன் பல்லாயிரக்கணக்கான ஆர்வமுள்ள விவசாயிகள் இணைந்து இந்த சூழலியல் மாற்றத்திற்கான பெரும்பணியினை செய்து வருகிறார்கள். இதுவரை 20,000 விவசாயிகளுக்கு தற்சார்பு விவசாய முறைகளை கற்பித்து வருகிறோம். படிப்படியாக நாம் இயற்கை விவசாய முறையை நோக்கி பயணிக்க வேண்டும். விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்காக ஈஷாவின் பல திட்டங்கள் அதன் தன்னார்வத்தொண்டர்களால் சிறப்பாக நடைபெற்று வருகிறது' என்றார்.


Isha

 
மேலும், கேரளாவில் பலாவில் இருந்து தயாரித்த பொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்தி வரும் ‘சக்கா கூட்டம்’ என்ற குழுவினரின் பொருட்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்ட பலா உணவுப் பொருட்களின் கண்காட்சியும் இத்திருவிழாவில் இடம்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அவர்கள், 'மரம்' மாசிலாமணி அவர்கள், ராமன் அவர்கள், சிவகங்கையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஆபிரகாம், தோட்டக்கலை துணை இயக்குனர் திரு. அருண் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.