வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (12:34 IST)

ஏரியில் தோண்ட தோண்ட தங்கம் - 57 சவரன் கண்டெடுப்பு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள வெங்காயப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் 57 சவரன் நகை கண்டெடுக்கப்பட்டது.
 

 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெங்காயப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேடியப்பன் கோவில் பராமரிப்பு பணி நேற்று நடந்தது.
 
அப்போது அங்கு சுமார் 2 அடி ஆழம் தோண்டிய போது, டாலருடன் கூடிய 57 சவரன் தங்க சங்கிலி பெண்களால் கண்டெடுக்கப்பட்டது. அதை மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
அந்த நகை மன்னர் காலத்து நகையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த நகையின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது, சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
தொடர்ந்து நேற்று நடைபெற்ற பணியில், அதே இடத்தில் இருந்து தங்க சங்கிலியின் அறுந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் எடை 66 கிராம் என வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என தெரிகிறது. பழமையான தங்க சங்கிலி ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால், அங்கு ஆய்வு நடத்த தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.