சென்னையில் சிகரம் தொடு பட பாணியில் நடந்த சம்பவம்; ஒரே நாளில் 32 கோடி ரூபாய் சுருட்டல்
இன்றைய நவீன உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடர்கள் நூதன முறையில் பொதுமக்களின் பணத்தை திருடி வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
சென்னை உட்பட பல மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் ரகசிய எண்களை திருடி மர்ம நபர்கள் ஒரே நாளில் 32 கோடி ரூபாயை திருடியுள்ளனர். மர்ம நபர்கள் ஏடிஎம் மெஷினில், கார்டு ஸ்வைப் செய்யும் இடத்தில் மெமரி கார்ட் உடனான கருவியை பொருத்தி விடுகின்றனர்.
அந்த கருவியானது வாடிக்கையாளரின் கார்டு விவரத்தை மெமரி கார்டில் சேகரித்துவிடும், அதேபோல் ஏடிஎம் மெஷினில் உள்ள பட்டனிற்கு மேல் கண்காணிப்பு கேமராவை பொருத்தி, வாடிக்கையாளர்களின் ரகசிய எண்களை திருடி விடுகின்றனர். இதனையறியாத வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் போல் தங்கள் பரிவத்தனையை மேற்கொள்கின்றனர். திருடிய வாடிக்கையாளரின் கார்டு எண் மற்றும் பின் நம்பரை வைத்து போலியான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பணம் திருடுபோனதையடுத்து அவர்கள் வங்கியை அணுகினர். வங்கி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.