பெற்றோர் அலட்சியத்தால் இன்றும் 3 வயது குழந்தை பலி!

Last Modified வெள்ளி, 1 நவம்பர் 2019 (20:49 IST)
நடுக்காட்டுப்பட்டி சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புப்படையினர் போராடினாலும் அது தோல்வியில் முடிந்தது. ஆனால் உண்மையில் சுஜித்தின் மரணத்திற்கு அவனது பெற்றோர்களின் அலட்சியமே முழுக்க முழுக்க காரணம். சுஜித்தின் மரணத்திற்கு பின்னரும் தமிழகத்தில் ஒருசில குழந்தைகள் பெற்றோர்களின் அலட்சியத்தால் பலியாகி வந்த நிலையில் இன்று ஆம்பூர் அருகே தண்ணீர் சேமித்து வைத்திருந்த கேனில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் என்ற பகுதியை சேர்ந்த வீரமணி-ரம்யா தம்பதியின் 3 வயது மகள் யஷ்வந்திகா வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது, துணிகளை துவைக்க வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளவு கொண்ட டிரம்மில் அந்த குழந்தை தவறி தலைகீழாக விழுந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து தாமதமாக புரிந்து கொண்ட அந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியதால் பெற்றோர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர்களின் அலட்சியத்தால் சின்ன குழந்தைகள் பலியாக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்டு சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :