1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (04:52 IST)

கடத்திய மாணவியை போலிஸை பார்த்ததும் கீழே தள்ளிவிட்டு தப்பியோட்டம்

புதுக்கோட்டை அருகே காரில் கடத்திச்சென்ற பள்ளி மாணவியை காவல் சோதனைச்சாவடி அருகே காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே துளையானூர் அடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மகள் பிரியங்கா (17). இவர் பி.அழகாபுரியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
 
இந்நிலையில் சனிக்கிழமை திருமயத்துக்கு தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பழந்தினாம்பட்டியைச் சேர்ந்த சேது மகன் மாதவன் (35) என்பவர் சிவப்பு நிறக்காரில் 2 நண்பர்களுடன் சென்று பிரியங்காவை காரில் கடத்திச்சென்றனர்.
 
கார் புதுக்கோட்டை-காரைக்குடி சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, சிவகங்கை மாவட்டம், நேமத்தான்பட்டியில் உள்ள காவல் சோதனைச்சாவடியில் இருந்த போலீசாரைப் பார்த்ததும் காரின் வேகத்தைக் குறைத்து மாணவி பிரியங்காவை காரிலிருந்து கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர்.
 
இது குறித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 3 பேரையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் தேடிவருகின்றனர். காரிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி ஆட்டோ மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.