வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 31 மார்ச் 2016 (13:31 IST)

விஜயகாந்துடன் கூட்டணி வைக்க 3 முக்கிய காரணங்கள்! - திருமாவளவன் விளக்கம்

தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி வைத்தது ஏன் என்றும் அதற்கான மூன்று முக்கிய காரணங்கள் என்ன என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
 

 
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சிப் பிரச்சாரப் பயணத்தின் 5வது கட்ட பிரச்சாரப் பயணத்தின் நிறைவு நாளான நேற்று புதனன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட்டில் நடைபெற்றது.
 
அதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், ”விஜயகாந்த் நினைத்திருந்தால், இந்தியாவை ஆளும் பிஜேபியுடனோ, திமுகவுடனோ கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால், அவர் மக்கள் நலக் கூட்டணியை தேர்வு செய்தார். இந்த முடிவு வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவு. மூன்று விசயங்களில் தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் ஒத்துச் செல்கின்றன.
 
1. ஆயா வேலை முதல் ஐ.ஏ.எஸ் நியமனம் வரை வெளிப்படையான ஊழல் நிலவி வருகிறது. ஊழலை ஒழிக்க வேண்டுமென தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் சபதம் எடுத்துள்ளன.
 
2. தமிழகத்தில் தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் உள்பட அனைத்து இடங்களிலும் மதுக் கடைகள் திறந்து வைத்துள்ளனர். நமதுவீட்டு பிள்ளைகளை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியிருக்கிறது தமிழக அரசு. மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென தேமுதிக, மநகூ சபதம் எடுத்துள்ளது.
 
3. இந்த ஊழல், மதுவை தமிழகத்தில் ஒழிக்க வேண்டுமெனில் அதிமுக, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. எனவே, தேமுதிக-மநகூ ஒன்று சேர்ந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழகத்தில் இனி ஒரு கட்சி ஆட்சி கிடையாது என வீராப்பு பேசினார்.
 
தற்போது திமுகஅணியில் போய் முடங்கிக் கிடக்கிறார். திமுக, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அறிவித்துள்ளது. ஓட்டு கேட்க, வெற்றிபெற கூட்டணி கட்சிகள் வேண்டுமாம். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் மட்டும் பங்கு கிடையாதாம். இது என்ன ஜனநாயகம்?
 
ஆனால், விஜயகாந்த், கூட்டணி ஆட்சிக்கு தயார் எனக் கூறியுள்ளார். இந்த துணிச்சல் யாருக்கு வரும்?எங்களது கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கு ஒற்றுமை உள்ளது. தற்போது தேர்தல் யுத்தம் நடைபெறுகிறது.
 
யுத்தம் தொடங்கும் போதுபோர் முரசு கொட்டப்படும் அந்த சின்னம்தான் தேமுதிகவின் முரசு. ஒவ்வொரு தொண்டனும் ஓய்வின்றி பம்பரம் போல் சுழன்று தேர்தல் பணியாற்ற வேண்டும் எனக் கூறவே மதிமுகவின் பம்பரம் சின்னம் உள்ளது. மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடம் விளைந்து கிடக்கிறது. அதை அறுவடை செய்யும் சின்னமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் உள்ளது.
 
தீய சக்திகளை ஊழல், மது, மதவாத சக்திகளை அழிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள், அதை அழித்து சவப்பெட்டியில் போட்டு ஆணி அடிக்கவே சுத்தியல் உள்ளது. இந்தக் காரியத்தை செய்து முடிக்கும் நம்பிக்கை நட்சத்திரமும் உள்ளது. வெற்றி பெற்றவுடன் அதை கொண்டாடும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சியின் மோதிரம் சின்னமும் உள்ளது” என்று கூறியுள்ளார்.