1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (10:22 IST)

கள்ளத்தொடர்பு... நகைத் திருட்டு... மோசமான கணவன்: 3 மகள்களுடன், மனைவி தற்கொலை

கள்ளக்காதல் போதாது என்று நகைத் திருட்டிலும் கணவர் ஈடுபட்டதால் மனமுடைந்த மனைவி தனது 3 மகள்களுடன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (53). ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் மின் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (50).  சக்திமாலா (25), கலைவாணி (20), காயத்ரி (17) இவரது முன்று மகள்கள். 
 
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தமிழ்ச்செல்வனுடன் தற்காலிக பணியாளராக சுதீஷ்ராஜாவின் மனைவி ரேவதி (27) என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். ரேவதியுடன் தமிழ்ச்செல்வனுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் மும்பையில் ஒரு வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தின் விசாரணையில் சுதீஷ்ராஜாவுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பை போலீசார் ஸ்ரீவைகுண்டம் வந்து சுதீஷ்ராஜாவின் மனைவி ரேவதியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கூறவே தமிழ்செல்வனிடமும் விசாரித்தனர். அவர் இந்த நகைகளுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார்.
 
இதற்கிடையே நகைகளை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு ஆசாரியிடம் விற்று பணமாக மாற்றிவிட்டதாக மும்பை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஆசாரியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தமிழ்ச்செல்வனும், ரேவதியும் தன்னிடம் 80 பவுன் நகைகளை விற்று பணம் பெற்றதாக கூறினார். 
 
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்ச்செல்வன் மற்றும் ரேவதியிடம் நேற்று மாலை மும்பை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர்கள் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டனர்.
 
மேலும் ஆசாரியிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் கவுரவமாக வாழ்ந்த தமிழ்ச்செல்வன் திருட்டு நகையை விற்ற வழக்கில் சிக்கி விட்டாரே என மனைவி ஜெயா, மகள்கள் சக்திமாலாதேவி, கலைவாணி, காயத்ரி ஆகியோர் மனம் உடைந்து, இனி மானத்தோடு உயிர் வாழ முடியாது என நினைத்து, தாய் ஜெயா, மகள்கள் சக்திமாலா, கலைவாணி, காயத்ரி ஆகிய 4 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
 
வீட்டின் மத்தியில் உள்ள அறையில் கலைவாணியும், காயத்ரியும் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர். தாய் ஜெயா, மூத்த மகள் சக்திமாலாதேவி படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். 
 
அக்கம் பக்கத்தினர் நீண்ட நேரம் கதவைத் தட்டி பார்த்தும் யாரும் திறக்காததால் ஆழ்வார்திருநகரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாதவன், ஆழ்வார் திருநகரி இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
போலீசார் 4 பேரின் உடலைக் கைப்பற்றிய போது மகள்கள் தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், அப்பா, நாங்கள் பல முறை சொல்லியும் ஒரு தப்பை நீங்கள் தொடர்நது செய்தீர்கள். இனி உங்களை திருத்த முடியாது என்பதால் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
இரு தவறான செயல்கள் ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து கொண்டது ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.