வங்கி திரும்பியது 3 கண்டெய்னர்கள்- பணம் எண்ணும் பணி முடிந்தது
திருப்பூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த பணத்தை எண்ணும் பணி முடிவடைந்து கோவை ஸ்டேட் வங்கி கிளைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை 13-06-15 அன்று நள்ளிரவு 12 மணியளவில் அவினாசி அருகே பெருமாநல்லூரில் - குன்னத்தூர் சாலையில் 3 கண்டெய்னர் லாரிகள் வரிசையாக வந்துள்ளன. சந்தேகமடைந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், 3 கார்களில் வந்த 15 பேர் தங்களை ஆந்திர மாநில காவல் துறையினர் என்றும், கோவையில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திர மாநில காவல் துறையினர் என்று கூறியவர்கள் சீருடையில் இல்லாமல், சாதாரண உடையில் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.
பின்னர், அவர்கள், வங்கியில் இருந்து கொண்டு வந்த பணம் என்று கூறினாலும் நகல் ஆவணங்கள் மட்டுமே இருந்ததால் 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், கண்டெய்னரில் உள்ள ரூ. 570 கோடி ரூபாய் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று அவ்வங்கி உரிமை கொண்டாடியது. மேலும், பணத்தை ரிசர்வ் வங்கி அனுமதியுடன் தான் கோவையிலிருந்து கொண்டு வருவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பணம் கோவை ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 3 கண்டெய்னரில் உள்ள பணத்தை எண்ணும் பணி நேற்று அதிகாலை 11 மணிக்கு தொடங்கியது. 3 கண்டெய்னரில் தலா 65 பெட்டிகள் இருந்துள்ளன. மாலை 5.30 மணிக்கு எண்ணும் பணி நிறைவடைந்தது.
இந்த பணம் 15 நாளுக்குப் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு அனுப்பி வைக்கப்படும் என வங்கி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.