1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (17:26 IST)

கோடிக்கணக்கான பணத்துடன் நின்ற கண்டெய்னர் லாரி - திருமங்கலம் அருகே பரபரப்பு

மதுரை திருமங்கலம் அருகே 2 கண்டெய்னர் லாரிகள் கோடிக்கணக்கான ரூபாயுடன் நடுவழியில் நின்ற தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் 2 கண்டெய்னர் லாரிகள் வந்து கொண்டிருந்தன. அதன் அருகே ஒரு ஜீப் மற்றும் காரில் காவல்துறையினர் இருந்தனர். அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தி விட்டு புறப்பட முயன்றனர்.
 
அப்போது கண்டெய்னர் லாரி திடீரென பழுதானது. இதனையடுத்து, உடனடியாக காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான 10 கமாண்டோ காவல்துறையினர் 2 கண்டெய்னர் லாரிகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.
 
இது குறித்த தகவல் கிடைத்ததும் திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையிலான காவல் துறையினர் அங்கு விரைந்தனர். அவர்களும் கண்டெய்னர் லாரிகளுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
 
இதுபற்றி விசாரித்த போது, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரிசர்வ் வங்கி 2 கண்டெய்னர் லாரிகளில் பணம் அனுப்பியதும், அந்த லாரிதான் பழுதாகி நிற்பதும் தெரியவந்தது.
 
முன்னதாக சட்டமன்றத் தேர்தலின் போது ரூ.570 கோடி கொண்டு செல்லப்பட்ட 3 கண்டெய்னர் லாரிகள் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், திருமங்கலத்தில் பணத்துடன் கண்டெய்னர் நின்ற தகவலால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.