வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (18:38 IST)

நிதி மோசடி வழக்கு - வின் டிவி தேவநாதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.!

Devanathan Arrest
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை வருகிற 28-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் இருந்து வருகிறார். மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.
 
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்பு தொகையாக, சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். சுமார் 140 க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 140 புகார்தாரர்களிடமிருந்து ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இதனையடுத்து  நிதி நிறுவன தலைவரும், தனியார் டிவி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவருமான தேவநாதனை நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து மோசடி புகார் தொடர்பாக சுமார் பத்து மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 
விசாரணைக்கு பிறகு தேவநாதனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.  அப்போது நீதிபதி வருகிற 28-ந்தேதி வரை (14 நாட்கள்) தேவநாதன் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.