செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (10:28 IST)

2ஜி விவகாரத்தில் ஊழல் நடந்தது என்பதை கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா? ஜெயலலிதா சரமாரி கேள்வி

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அவர் பேசியதாவது:
 
மக்கள் நலனை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி தி.மு.க. இந்த தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் ஆ.ராசா. சென்ற முறையும் ராசா இந்த தொகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். உங்களுக்கு ராசா ஏதாவது செய்தாரா? இல்லை.
 
நீலகிரி மாவட்ட மக்களுக்கு என ராசா ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தாரா?, இல்லை. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரி பதவியை வகித்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய நாட்டிற்கு இழப்பு ஏற்படும் வகையில் ஊழல் புரிந்தவர் ராசா. இதனால் நீலகிரி தொகுதிக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இல்லையே. இதனால், லாபம் அடைந்தது கருணாநிதியின் குடும்பம் தான். நஷ்டம் அடைந்தது இந்தியா.
 
 
அதனால் தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசா நிரபராதி என்று ஸ்டாலின் சொல்கிறார். ராசா எந்த தவறும் செய்யவில்லை; போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக்கொண்டிருக்கின்றன; அந்த வழக்குகளை நிரூபிக்கக்கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார்.
இந்த வழக்கில் தி.மு.க. ஆதாயம் அடையவில்லை என்றால், இந்த வழக்கில் ராசா குற்றமற்றவர் என்றால், தற்போது கருணாநிதி கூறுவதைப்போல காங்கிரஸ் கட்சி பழி வாங்குகிறது என்றால், 2010–ம் ஆண்டே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கலாமே?. ஆனால், அதை செய்தாரா கருணாநிதி? இல்லையே. மாறாக, அந்த கூட்டணியிலேயே ஒட்டிக்கொண்டு இந்த வழக்கில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று தானே கருணாநிதி முயற்சி செய்தார்?.
 
எந்த விதிமுறையையும் பின்பற்றாமல், யாரையும் மதிக்காமல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை தனியாருக்கு விற்றதில் தான், இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
 
ஏழை மக்கள் பயன் அடைய வேண்டும் என்பதற்காக தொலை தொடர்பு துறையில் தான் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாக ராசா கூறி வருகிறார். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற பல நிறுவனங்கள் ஓர் ஆண்டு கடந்தும் தங்களது சேவையை தொடங்கவே இல்லையே. எப்படி ஏழைகள் பயன் அடைய முடியும்?. தனியார் நிறுவனங்கள் தானே பயன் அடைந்தன?.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாக தம்பட்டம் அடித்து இருக்கிறது. ராசாவும் இதையே கூறி வருகிறார். புதிய உரிமங்கள் பெற்ற எந்த நிறுவனம் இந்த வசதியை செய்து கொடுத்தது? எந்த நிறுவனமும் இந்த வசதியை செய்து கொடுக்கவில்லையே. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தான் இந்த வசதியை வழங்கியது. தேர்தலுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தற்போது எங்கே நடைமுறையில் இருக்கிறது, சொல்ல முடியுமா?.
 
2001–ம் ஆண்டு நிர்ணயித்த விலையில், 2008–ம் ஆண்டு விற்பதை எப்படி நியாயம் என்கிறார் கருணாநிதி?. தன்னுடைய சொத்தாக இருந்தால் இந்த முறையை கடைபிடிப்பாரா கருணாநிதி?.
 
கருணாநிதியினுடைய சொத்தாக இருந்தால், 2001–ல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008–ம் ஆண்டு விற்பனை செய்வாரா?. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எதுவுமே நடக்கவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். அப்படி என்றால் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் கனிமொழி இயக்குனர்களாக இருந்த குடும்ப தொலைக்காட்சியின் கணக்கில் 214 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது? யாருடைய கணக்கில் இருந்து வந்தது? எதற்காக கொடுத்தார்கள்?. ஏன் கொடுத்தார்கள்?.
 
உண்மையிலேயே நியாயமான முறையில் அந்த பணம் பெறப்பட்டிருந்தால், அந்த பணத்தை ஏன் அவசர அவசரமாக திருப்பி கொடுத்தார்கள்?. அந்த பணம் எப்படி திருப்பி கொடுக்கப்பட்டது? ஏன் திருப்பிக்கொடுக்கப்பட்டது? இவற்றையெல்லாம் கருணாநிதி ஏன் விளக்கவில்லை? ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் கருணாநிதி குடும்பத்தினருக்கு பணம் சென்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?.
 
அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஏன் பேசினார்கள்? என்ன பேசினார்கள்? இதை விளக்க கருணாநிதி தயாரா? ராசாவால் இதற்கு பதில் அளிக்க முடியுமா? தொலைக்காட்சி கணக்குகளை திருத்தும்படி மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டதே? இதற்கு கருணாநிதியால் விளக்கம் அளிக்க முடியுமா? இவை எல்லாம் உண்மைக்கு மாறானவை என்று கருணாநிதி கூறுவாரேயானால் இதனை வெளியிட்டவர்கள் மீது ஏன் இதுவரை மானநஷ்ட வழக்கு தொடுக்கவில்லை? ஊழல் நடந்தது என்பதை ஒத்துக்கொள்கிறாரா கருணாநிதி?
 
இவ்வாறு பேசினார் ஜெயலலிதா.