செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (19:13 IST)

திமுக எம்.பி. ரித்தீஷ் அதிமுகவில் இணைந்தார்

திமுக எம்.பி. ரித்தீஷ் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
 
நடிகர் ரித்தீஷ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 
 
இதையடுத்து ரித்தீஷ் எம்.பி.க்கு திமுக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பட்டியலில் ரித்தீஷ் எம்.பி. புறக்கணிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். அவர் அதிமுகவில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. 
 
இன்று மதியம் ரித்தீஷ் எம்.பி. போயஸ் கார்டன் சென்று முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கினார்.
 
பிறகு செய்தியாளர்களிடம் ரித்தீஷ் கூறியதாவது, திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கே இடமளிக்கப்படுகிறது. ஸ்டாலின் திமுக தலைவராவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார். வருகிற திமுக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு கலைஞரையும் திமுகவிலிருந்து ஸ்டாலின் வெளியேற்றிவிடுவார். திமுகவிலிருந்து பலர் அம்மாவை சந்தித்து அதிமுகவில் சேருவார்கள் என்று ரித்தீஷ் கூறினார்.