சென்னை விமான நிலையத்தில் மர்மப் பொருளால் பரபரப்பு

Ilavarasan| Last Modified புதன், 7 மே 2014 (13:24 IST)
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று காலை மர்மப் பொருள் ஒன்று நிண்ட நேரமாக கேட்பாரற்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, பெங்களூர், கொச்சின் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களை கார் வெடிகுண்டு மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னை உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிலையங்கள் 24 மணி நேரமும் 5 அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. பயணிகள் மற்றும் உடமைகள், கார்கள் கடுமையான சோதனைக்கு பின் விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் புறப்பாடு பகுதி முதல் நுழைவு வாசலில் கேட்பாரற்று ஒரு கேமரா ஸ்டேண்ட் கிடந்தது. கோவை, பெங்களூர், ஐதராபாத் செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் ஒரு புறம் காத்து நின்றனர். ஆனால் அந்த கேமரா ஸ்டேண்ட் நீண்ட நேரமாக அனாதையாக இருந்ததால் அதுயாருடையது என்று பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கு வெடிகுண்டு பீதியும், பதட்டமும் காணப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடி குண்டு கவச உடை அணிந்து அந்த கேமரா ஸ்டேண்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சோதனை காரணமாக முதலாவது வாசல் பகுதி அடைக்கப்பட்டது. பார்வையாளர்கள், பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அங்கு வெடிகுண்டு பீதி அடங்க சிறிது நேரம் ஆனது. சோதனைக்குப் பின், அந்த பொருளை பயணி யாரோ விட்டு விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.


இதில் மேலும் படிக்கவும் :