செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (21:57 IST)

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் நரேந்திர மோடி சந்திப்பு

சென்னை வந்த நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடம் நடந்தது. வெளியே வந்த அவர் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
Modi_Rajini
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடி நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார். 
 
பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக அவர் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசப் போவதாக பாஜக சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 
 
அதன்படி தனி விமானத்தில் சென்னை வந்த மோடி விமான நிலையத்தில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜனிகாந்த் வீட்டுக்கு காரில் சரியாக நேற்று மாலை 6.35 மணிக்கு வந்தார். அவருக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு கார்கள் வந்தன.

நரேந்திர மோடி வந்ததும் ரஜினிகாந்த் வீட்டின் ‘கேட்’ திறக்கப்பட்டது. நரேந்திர மோடியின் கார் மட்டும் ரஜினிகாந்த் வீட்டுக்குள் சென்றது. நரேந்திர மோடி வேட்டி - சட்டை மற்றும் பாஜக கரை போட்ட துண்டு அணிந்து இருந்தார்.
 
காரில் இருந்து இறங்கியதும் நரேந்திர மோடியை பொன்னாடை போர்த்தி ரஜினிகாந்த் வரவேற்றார். நரேந்திர மோடியுடன் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் முரளிதரராவ், மாநில அமைப்புச் செயலாளர் மோகன்ராஜூலு ஆகியோரும் வந்திருந்தனர்.
 
நரேந்திர மோடி - ரஜினிகாந்த் சந்திப்பை யொட்டி ரஜினிகாந்த் வீட்டின் முன்பும், போயஸ்கார்டன் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 
நடிகர் ரஜினிகாந்தும் நரேந்திர மோடியும் 40 நிமிடம் சந்தித்து பேசினார்கள். சந்திப்பு முடிந்த பின்னர் இரவு 7.15 மணிக்கு இருவரும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி கொண்டனர்.
 
அப்போது நரேந்திர மோடி வெற்றி என்று குறிக்கும் வகையில் இரு விரல்களை உயர்த்திக் காட்டினார். பின்னர் அவர் செயலாளர்களிடம் கூறுகையில், ‘‘ரஜினிகாந்த் எனது நல்ல நண்பர் அவருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்’’ என்றார். அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அப்போது அவர் கூறினார்.
 
பின்னர் நரேந்திர மோடியும், ரஜினிகாந்தும் ஒருவரை ஒருவர் தழுவி கட்டிக் கொண்டனர். பின்னர் நரேந்திர மோடி ரஜினிகாந்திடம் விடை பெற்று காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.