சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாமியார் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

Ilavarasan| Last Modified வியாழன், 15 மே 2014 (12:53 IST)
சென்னை சூளையில் அருள்வாக்கு சொல்லும் ஸ்ரீபாச்சி சாமியார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
சென்னை சூளையில் ஸ்ரீபாச்சி சுவாமிகள் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அருள்வாக்கு சொல்லி பொதுமக்களிடம் பிரசித்தி பெற்றவர். இவர் அங்குள்ள சி.கே.பி. தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது உண்மையான பெயர் ஜானகிராமன்(வயது 42). இவரது மனைவி பெயர் இந்திரா (38). 2 மகன்கள் உள்ளனர்.

இவர் சூளை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக ஆன்மிக பணி செய்து வந்தார். அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் உட்கார்ந்து, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அருள் வாக்கு சொல்வார். மேலும் இவர் தனது சொந்த வீட்டு முன்பு, பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலையும் சிறிய அளவில் கட்டி வழிபட்டு வந்தார். தனது வீட்டில் வைத்து பக்தர்களுக்கு தினமும் குறிசொல்வார். சூளை நடராஜர் தியேட்டர் அருகே உள்ள பால் முனீஸ்வரர் சாமி பெயரைச்சொல்லியும் இவர் குறி சொல்வாராம். தீச்சட்டி எடுத்து சாமியும் ஆடுவார்.
ஸ்ரீபாச்சி சாமியார் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடுரோட்டில் பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, பால் பாக்கெட் வாங்கி வந்தார். அதன்பிறகு கோவிலை திறந்து பூஜை செய்தார். பின்னர் டீ சாப்பிட ரோட்டுக்கு வந்தார். அப்போது காலை 6.30 மணி இருக்கும். ரோட்டில் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது.

அந்த கோவில் முன்பு வரும்போது திடீரென்று இவர் தாக்கப்பட்டார். ஒரு கும்பல் அரிவாளுடன் பாய்ந்து வந்தனர். பாச்சி சாமியாரை சரமாரியாக வெட்டினார்கள். 12 இடங்களில் வெட்டு விழுந்தது. தலை, கழுத்து, முகம், கைகள் போன்ற இடங்களில் வெட்டி சாய்த்து கொன்று விட்டனர்.
முன்விரோதம் காரணமாக பாச்சி சாமியார் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. கொலை செய்யப்பட்ட தினத்தன்றே, இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் புதிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.

வேப்பேரி காவல்துறையினர்தான் இந்த கொலை வழக்கை விசாரித்தார்கள். வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு, அண்மையில் 2 ரவுடிகளை கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீபாச்சி சாமியார் கொலை பற்றி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.
அந்த ரவுடிகள் இருவரும், பாச்சி சாமியார் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதும்,தெரிய வந்தது. இதனால் இந்த கொலை வழக்கை மீண்டும் மறு விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்ற அனுமதியை காவல்துறையினர் கோரி உள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன், காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது பாச்சி சாமியார் கொலை பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகலாம், என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :