தாயின் கறுவறையில் இருந்து
பனிக்குடத்தைக் கிழித்துக்கொண்டு
அழுகையுடன் வெளிவரும் ஜனனத்தின் தொடக்கம்!
கனவுகளை மட்டும் மூளையில் அப்பிக்கொண்டு
கற்பனைகளை, ஆசைகளை சுமக்கத் தொடங்கும்
ஒரு சராசரி மனிதனின் அற்ப வாழ்க்கை!
தாயின் மடியில் சுகம் கண்டு,
தாய்ப்பால் உண்டு,
பண்ணிய பண்டங்கள் தின்று,
சுவைத்தலில் தொடங்கி,
களித்தலில் மயங்கி,
ரசித்தலில் கிறங்கும் மனசு...
திமிர்தல், கற்றல், சுற்றல், பொய், களவு,
ஏமாற்றமும், ஏமாற்று நிமித்தமும்...
பெண் மனது கவர்தலும்,
ஆண் மனம் அறிதலும்...
காதலின் சுகத்தில் கிரங்குதல்
காதல், காமம், திருமணம், தாம்பத்யம், சல்லாபம்...
பேறு பெறுதல், வளர்த்தல்,
சொத்து சேர்க்கை,
பணம் என்னும் பேய்,
பயம் என்னும் பிசாசு,
வாழ்தலுக்கான காரணமின்மை,
வஞ்சகத்தின் அறுவறுப்பு,
இயலாமையின் அழுகை,
தோல்வியின் விரக்தி,
விரக்தியின் வெறுமை,
வெறுமையின் தனிமை,
தனிமையின் சிறுமை...
மதுவின் போதையில் மிதத்தல்,
போதையின் அறிவில் உலறல்,
விடியும்போது முக்கல், முணகல்...
வாழ்க்கை வெறுத்தல்
வெறுப்பை உமிழ்தல்,
அரக்க தணத்திற்கும், இரக்க குணத்திற்கும்
இடையேயான ஊசலாட்டம்...
அடிமை சங்கிலியின் பிணைப்பில் வீழ்தல்,
எழுதல், தடுமாறல், மீண்டும் வீழ்தல்,
ஆன்மாவை இழத்தல்,
சுயமரியாதை அற்றல்..
உறவு, பிரிவு, வெறுப்பு, கசப்பு,
போற்றல், தூற்றல், சபித்தல்,
சகித்தல், நொந்து கொள்ளுதல்,
மோதல், சாதல்!
இதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை?