ஆனாலும் நீ நம்பமாட்டாய்...

சுரேஷ் வெங்கடாசலம்| Last Updated: சனி, 30 ஜனவரி 2016 (20:55 IST)
உள்ளத்தில் அன்பொழுக இதயம் படபடக்க அன்பில் ஊறிய மனம் கவிதை பாடுகிறது. இதோ...

ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
உன் அன்பே எனக்கு வம்பு - ஆனால்
அதுதான் எனக்கு தெம்பு
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
உன் கோபம் எனக்கு சாபம்
அந்த சொல்தான் எனக்கு வேதம்
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
உன் சிரிப்பே எனக்கு நோய்
அதுதான் எனக்கு மருந்தும்
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
உன் அழைப்பே எனக்கு களிப்பு
அதுவன்றி வேறேது எனக்கு பிழைப்பு
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
கடற்கரையை கடக்கும் நிமிடங்கள் - உப்பு
காற்றை சுவாசிக்கும் நொடிகள்
ஒவ்வொன்றிலும் உன் பிம்பங்கள்
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
எழுந்து நடக்கும் நிமிடங்கள்
எழுத நினைக்கும் நினைவுகள்
அனைத்திலும் உன் அன்பின் நிழல்கள்தான்
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
பல் துலக்கும் நேரம் தொடங்கி
படுத்துறங்கி அடங்கும்வரை - நாளும்
பலகோடிகளைத் தாண்டும் உன் நினைவுகள்
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
பிரியமாய் பேசும் நாட்களில்
பிரிந்தோடி மறையும் சொற்கள்
கோபத்தில் என்னை நீ கொளுத்திச்
செல்லும்போது கோர்த்துக்கொள்கின்றன
கவிதையாய்...
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
ஆளுயர நான் வளர்ந்து நின்றாலும்
அடிசறுக்கி வீழ்ந்து தொலைந்தாலும்
அது உன் அன்பினால் மட்டுமே
ஆனாலும் நீ நம்பமாட்டாய்...
 
நம்ப மறுப்பதுபோல் நீ என்னை
நாடி பிடித்துப் பார்ப்பதும்...
நானறிந்த வழிகளிலெல்லாம்
நாளும் எனதன்பை புரியவைக்க
துடிப்பதும்தான்
நம்நட்பின் அழகே...
- சாரா தூரிகை
 


இதில் மேலும் படிக்கவும் :