1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 12 மே 2016 (15:05 IST)

”என்னைக் காதலிப்பதாக கூறியதால் எனக்குப் பயமாக இருக்கிறது” - பாப் மார்லே

’கருப்பு, வெள்ளை, சீனம் என்ற அனைத்து இன மக்களும், மனிதன் என்ற அடிப்படையில் ஒன்று சேர்வதே எனது கனவு’ என்று கூறிய கவிஞனின் காதல் கவிதை இது...


 
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ’ரேகே’ இசை வகையில் பாடிய கவிஞர் மற்றும் பாடகர் ’பாப் மார்லே’. சிக்கு கொண்ட தலைமுடித் தோற்றம் கொண்ட இவர், சமூக சிக்கல்களையும், அரசியல் உணர்வுகளையும், விடுதலை வேட்கையையும் தனது பாடல்களில் வடித்தவர்.

”என்னைக் காதலிப்பதாக கூறியதால் எனக்குப் பயமாக இருக்கிறது”
 
நீ மழையை நேசிப்பதாகக் கூறினாய்..
ஆனால், மழை பொழிந்த பொழுதில்
உனது குடையை நீ விரித்துக் கொண்டாய்...
 

 
நீ சூரியனை நேசிப்பதாகக் கூறினாய்..
ஆனால், சூரிய ஒளி பிரகாசித்தபோது
நீ நிழலுக்காக பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றாய்...
 
நீ தென்றல் காற்றை நேசிப்பதாகக் கூறினாய்,
ஆனால், தென்றல் வீசிய பொழுது
நீ உனது சாளரங்களை மூடிக்கொண்டாய்...
 
நான் பயப்படுவது இதனால் தான்..
நீ கூறினாய்
என்னையும்கூட மிகவும் நேசிப்பதாக....
 
[தமிழில்: லெனின் அகத்தியநாடன்]