1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 20 ஜூன் 2015 (23:33 IST)

தந்தையர் தினம் சிறப்புக் கவிதை !

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு தினம் ஆகும். உலகில் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்றும், மற்ற பல்வேறு நாடுகளில் பிற நாட்களிலிலும், தந்தையர் தினம் சிறப்பாக கொண்டாப்படுகிறது. 
 

 
இந்த இனிய நாளில் தந்தையர்களை சிறப்பிக்கும் வகையில் ஒரு அற்புதமான கவிதைகள் நம்மை மட்டுமல்ல நமது தந்தையர்களையும் மெலிசிலிர்க்கவைத்துள்ளது. இதோ அந்த இனிய கவிதை.....
   
நான் அறிந்த 
கட்டபொம்மனும் 
கர்ண மகாராசனும் 
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும் 
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த 
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான். 
 
அப்பாவின் 
கடின உழைப்புக்கு
அவரது தலைப்பாகைதான்
சாட்சியம்.
அதில் உப்பு பூத்திருக்கும்
அழகைக்காணும் போதெல்லாம்
எனக்குள்தான்
எத்தினை பூரிப்பு.
எத்தினை மாற்றம்.
அம்மாவின் அடுக்களை
பண்டத்தை விடவும்
எனது நாசிக்கு அதிகம்
பழக்கப்பட்டது
அப்பாவின் வியர்வை
நாற்றம்தான்.
முகம் ஒற்றிக்கொள்ளும்
தோள் துப்பட்டாவை
தலைப்பாகையாக 
உடுத்திக்கொள்ளும் போதுதான் 
இருக்கிறதே மிடுக்கு,
ஏழு தலைமுறைக்கான
நிமிர்வு எனக்கு.
 
ஆனாலும்
வாழைக்குணம் அப்பாவுக்கு.
குலை போட்டும் 
குனிவாய் வாழைகள்.
அப்பாவும் குனிகிறார்
நான் கனிவதற்காக.
சிறு வயதில்
அந்தக்குனிவில் 
சவாரி விட்டவன் நான்.
ஆனால் எனது முதுகில்
யாரும் சவாரி
விட்டுவிடக்கூடாது
என்பதற்காகத்தானே
அப்பா இத்தனைக்கும்
கஸ்ரப்படுகின்றார்.
 
பள்ளி முடிந்தும்
வீடு திரும்பாத
என்னைத்தேடி
அம்மா தெரு ஏறுவா.
நான் வயல் இறங்குவன்.
எனது கால் கழுவி
வரப்பிருத்தி விடும் அப்பா
எனது சட்டையில் 
அழுக்குச்சேராதிருக்க
சேறு குளிக்கிறார் 
நெடுநாளும்.
 
அப்பா சேறு மிதித்திட்டு
வரப்புகளோடு
நடந்து வருவார்.
அதை படம்பிடிச்சு பெரிசாய்
சுவரில மாட்டோணும் என்று 
எனக்குள் நெடுநாளும்
ரொம்பவே ஆசை.
நிறைவேறவே இல்ல.
கடதாசியை எடுத்து வரைஞ்சும் 
திருப்தி காணாத நான்
கண்ணாடி முன்னே
அதிக நேரத்தை 
செலவழிச்சிருவன்
வேசமிட்டு அப்பாபோல
மீசை வைச்சு
அழிச்சு அழிச்சு
நேர்த்தி வரும் வரைக்கும்.
ஆனால் அப்பாபோல
சுருட்டிழுப்பு ஒத்திகை பார்த்து
அவர் ஒத்தடம் கொடுத்த வடுக்கள்
இப்பவும்
எனது நடத்தையை
ஒழுங்காற்றிக்கொண்டிருக்கும்
அப்பாவின் இன்னுமொரு முகம். 
 
அப்பாவுக்கு
மூத்த பிள்ளை நான்தான்
ஆனாலும் தலைப்பிள்ளை
வயல்தான்.
அம்மாவை விடவும்
அவருக்கு நல்ல துணை
மயிலையும் சிவலையும்.
அப்பா அதிகம் நேசிப்பது 
அவைகளைத்தான்.
அவரது
சொத்துச்சுகம் எல்லாமே
அந்த திண்ணை வீடும்
கொல்லைப்புறமும் தான்.
அப்பா கைகளை
தலையணையாகக்கொண்டு
(இ)ராஜ தூக்கம் போடும்
அந்த மாமர நிழலுக்கு
மட்டும்தான் அப்பாவின் 
கனவுகளின் கனதி புரியும்.
அந்த தென்னைகளுக்குத்தான்
எத்தினை வயசு. 
அதன் கீழிருந்து அப்பா
அண்ணாந்து விடும்
பெரு மூச்சில்தான்
அவற்றின் மூப்பை
அளவிட முடியும்.
 
அப்பாவுக்கு ஆயுசு கெட்டி.
பழஞ்சோற்றுல பசி போக்கிறதும்
மோரில தாகம் தணிக்கிறதும்தான்
அவரது உடல் தெம்பு.
ஆங்கே வீழ்ந்து கிடக்கும் மரங்களை
குற்றிகளாக வீடு சேர்க்கும்போது 
நான்
அப்பாவின் உடல் 
திரட்சிகளை
கணக்கெடுத்தவாறல்லவா
பின் தொடர்ந்திருக்கிறேன். 
 
எனக்கு
“புதியதொரு உலகை”
காட்டியது அப்பாதான்.
வயலில இறங்கி
நடக்க ஆரம்பிச்சிட்டா
அவர் பின்னே
எனது விடுப்பு கேள்விகள் போகும்.
நாட்டு நடப்புகள் அத்தினையும்
அப்பாவுக்கு அத்துப்படி.
ஆர்வமிகுதியால்
விடுமுறை நாள்களில் கூட
கட்டுச்சோற்றோடு வயலுக்கு
ஓ(டி)டுவன்.
அப்பா வயலில நிற்கிற
ஒவ்வொரு நிமிசமும் கூடக்கூட 
வயல் காட்சி மீது பிடிப்பும்
அதிகரிச்சுக்கொண்டே போகும்.
பொழுது சாய்கிற 
நாழிகை மீதுதான்
கோபம் அதிகமாக வரும்.
பலம் கொண்டவரை
நிலத்தை உதைப்பன்
வலிக்கு அப்பா மருந்திடுவார்.
 
(இ)ராத்திரி பூராவும்
எனது சுகமான தூக்கம்
அப்பாவின் நெஞ்சில்.
அவரது நெஞ்சு மயிர் பிடித்து
பழகிப்போன
இந்தக்கைகளுக்குள்
எழுதுகருவியை திணித்தது
என்னவோ அப்பாதான்.
ஆனாலும் அந்த 
மண்வெட்டி பிடித்த
கைகளைப்பற்றி 
எழுதும்போதுதானே
எந்த எழுதுகருவி 
பிடிக்கும் கைக்கும்
பெருமை சேர்(க்)கிறது.        
 
 
முல்லைத்தீவிலிருந்து... தாயக கவிஞர் அ.ஈழம் சேகுவேரா.