எமது இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது: லல்லி


Jeni Jeevaraj| Last Updated: ஞாயிறு, 26 ஜூலை 2015 (11:24 IST)
உடல் மீது அடித்தால்தான் வலி வரும் என்பது அந்தக் காலம். இன்று மனம் நொறுங்கும் அளவு அதன் மீது, அடிகளை அடுக்கடுக்காகப் பாய்ச்சும் கலையை சிலர் நன்றாகவே கற்றுத் தேர்ந்துவிட்டனர். உடல் வலியைக் கூடசில நேரங்களில் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், மனதில் வலி வந்துவிட்டால், அதை தாங்க ஒரு இதயம் வேண்டுமே. ஆனால், நம்மிடம் இருப்பதோ ஒரு இதயம் தானே.. என்ன செய்வது?
 
 
இந்நிலையில்தான், மனதில் உள்ள வலிகளையும், ரணங்களையும், உலகம் முன் வைத்து ஆறுதல் கேட்கிறார் லல்லி. அவரது அற்புத வரிகளுக்கும், விடை தெரியாத கேள்விகளுக்கும், ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது.
 
ஒவ்வொரு முறை வாசிக்கும் போது, ஒரு அர்த்தம் கிடைக்கின்றது. அந்த இனிய, மறக்கமுடியாத, புறக்கணிக்க முடியாத நினைவலைகள் இதோ.....
 
மீண்டும் நாட்டிற்கு மீண்டும் செல்வேனா என்ற ஏக்கம் ஒரு புறமிருக்க, தற்போது நாட்டில் நிலவும் அரசியல் மாற்றம் குறித்த சிந்தனை மற்றும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள எம்மவர்களின் எதிர்காலம் குறித்து சற்று சிந்தித்துப்பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.
 
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது நாட்டில் புதிய பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அதனுடன் இணைந்த வெற்றிகளுக்காக ஒன்றிணையும் கட்சிகள். இவைகளெல்லாம் நாட்டில் மீண்டும் ஒரு முறை எனது இனம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு கொலைக்கழம் செல்ல வேண்டிய சூழல் உருவாகுமா?
 
கடந்த தசாப்தங்களில் இழந்த வடுக்களின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை அதற்குள் மீண்டும் ஒரு முறை இந்த தேர்தல் தமிழினத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்குமா அல்லது அவர்களின் சுமூகமான வாழ்க்கைக்கு வழி வகுக்குமா?
 
நாட்டுக்குத் திரும்பும் எனது பயணம் போலவே எமது இனத்தின் எதிர்காலமும் கேள்வியாகத் தான் உள்ளது. இவற்றுக்கு எல்லாம் காலம் தான் பதில் கூற வேண்டும்.
 
நான் பிறந்து வளர்ந்து பெரிய மனுஷியாகியாக 2009 ஆம் ஆண்டு காலம் வரை ஈழத்தில் போதைப்பொருள் பாலியல் கொடுமை பகிடிவதை சேட்டை, இணையத்தள குற்றம் என்ற  வார்த்தைகளை கேட்டதில்லை. அந்தளவிற்கு ஒரு இறுக்கமான அதேநேரம் தமிழர்களுக்கான ஒரு கட்டுப்பாட்டுடைய சமூகத்தின் கீழ் அமைதியான முறையில் எமது வாழ்க்கை நகர்ந்தது.
 
எனினும் இன்று ஈழத்தில் பாடசாலைகளில் கோவில்கள் என மரியாதைக்குரிய பொது இடங்களில் மரியாதையின்றி இந்த அடாவடித்தன செயற்பாடுகள் அரங்கேறுகின்றன.
 
ஊடகவியலாளராக அறியப்பட்ட என்னையும் கூட சொந்த மண்ணில் நான் சுய மரியாதையுடன் வசிக்க முடியாமல் போகும் அளவிற்கு இணையத்தளங்களில் ஒரு விலைமாதுவாக பேசும் அளவிற்கு மிகவும் அவலட்சமான முறையில் பதிவேற்றம் செய்யும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. என்ன இருந்தாலும் நானும் ஒரு பெண் தானே ஆயிரம் வீரவசனங்களை பேசினாலும் குடும்பம் சமூகம் சுற்றுச்சூழல் என அத்தனைக்கும் கட்டுப்பட்டுத் தானே போக வேண்டும்.
 
எனவே தான் அங்காங்கே நடக்கும் இந்த அத்துமீறல்களைக் கூட எனக்கு நேரடியாக தட்டிக்கேட்க முடியவில்லை. இவ்வாறான செயல்பாடுகள் இளைஞர்களுக்கு ஒரு வித பொழுது போக்கு என்றாலும், இவ்வாறான செயற்பாடுகள், என்னைப்போன்ற பலரது வாழ்க்கையை சீரழித்தன என்பது ஒரு புறமிருக்க மறுபுறம் இதுவும் ஒரு உயிர்கொல்லியாக அல்லவா செயற்படுகிறது.
 
இளைஞர்ககளின் பொறுப்புணர்வற்ற இவ்வாறான இணையத்தள பகிடிவதை சேஷ்டை கடந்த மாதம் கூட எமது பகுதியில் ஒரு பல்கவைக்கழக மாணவி தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டுள்ளன.
 
இன்று அர்த்தம் இல்லாத பதிவேற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளன. மாணவி இல்லை. ஒரு வழிநடத்தல் இல்லாது சீர் குழையும் எனது சமூகத்திறகான சிறந்த வழிகாட்டல் யாராக இருக்க முடியும்.
 
ஆம், எம்மை நாமே அழித்துக்கொள்ளும் அளவிற்கு எமக்கிடையிலேயே விரோதங்கள் பகை உணர்வுகள் எல்லாம் உருவாகி விட்டது. நாம் நம்மைப் பற்றி மாத்திரமே சிந்திக்க முற்படுகின்றோம். 30 வருட தமிழர்களின் இராச்சியம் எமது அழிவு எல்லாவற்றினதும் காரணகர்த்தா இதுவென்றே எண்ணுகின்றேன்.
 
உலகம் எங்கோ நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அந்த நவீனத்திற்கும் நாம் நல்லதைத் விட்டு தீயதை மட்டுமே பின்பற்றுகின்றோம். இன்றும் புறங்கூறலும் அடுத்த வீட்டு புரளி கேட்கவும் ஓயவில்லை, வெளிநாடுகளில் வாழ்கின்றோம் எமது உறவுகள் குறித்து அங்கலாய்கின்றோம் என்றாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை விடுத்து அவர்கள் பால் காணப்படும் குறைகளையே சுட்டிக்காட்டும் ஒரு வசதி படைத்த சமூகமாக நாம் மாறிக்கொண்டு செல்கின்றோம்.
 
நான் ஈழத்தவன் என்ற பெருமிதம் பிடித்த பலருள் நானும் ஒருத்தி, சிங்கள சமூகத்தினரையே குறை கூறி அவர்கள் தான் எனது இனத்தை கெடுக்கிறார்கள் என்று வாய் கிழிய பேசுகின்றேன் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் எனது மனச்சாட்சி என்னை கேள்வி கேக்கிறது.
 
ஆண்ட தமிழன் மீண்டும் ஒரு முறை ஆளவேண்டும் என வீரமுழக்கம் பேசும் உங்களைப் போன்ற ஈழத்தவர்களுக்கு சுயபுத்தி இல்லையா? போதைப் பொருள் என்றாலும் கற்பழிப்பு என்றாலும் எல்லாம் சிங்களவன் தான் உங்களுக்கு சொல்லித் தர வேண்டுமா என்று?
 
அம்மா, அப்பா, மூத்தோர் சகோதரம் என்ற ஒரு குடும்ப ஒழுங்கின் கீழ் சொந்த மண்ணில் சுதந்திரமாக அதேவேளை சுயமரியாதையுடன் வாழ்ந்து வந்த ஈழத்தமிழ் சமூகம் இன்று அடுத்தவன் வீட்டு வாசலில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
 
இங்கு உறவுகளும் இல்லை அவர்களுக்கான மரியாதையும் இல்லை. இதே நிலைக்கு தான் ஈழத்தில் எனது உறவுகளும் தள்ளப்பட்டுள்ளன. இதில் நான் இங்கிருந்தால் என்ன? எனது மண்ணிற்கு சென்றால் தான் என்ன? என்றாலும் என்னைப் பெற்றவள் என்ற ஒரு அப்பாவி ஜீவன் இன்னமும் அங்கு தானே எனது வருகைக்காக காத்திருக்கிறது. அந்தக் கால தாய் தானே என்று விட்டுவிடவா முடியும்?
 
நான் வாழ்ந்த வளர்ந்த சூழல் இன்றும் பசுமையான பல நினைவுகள் அந்த அன்னையின் ஒரு பிடி குழையல் சோற்றின் அன்பிலே அத்தனையும் அடங்கிவிடும். காலங்கள் நகர்கின்றன. வயதும் கடந்து விட்டது. எத்தனை சம்பாத்தியங்களைப் பெற்றாலும் அன்னை அவள் அன்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் மாத்திரம் என் நெஞ்சை விட்டு மாறவில்லை.
 
இவை எல்லாம் எதற்கு என்று தூக்கிப்போட்டு விட்டு நாட்டிற்கு செல்வோம் என்றால் ஊரில் சென்று குடும்பத்தை கவனிக்கும் அளவிற்கு வேலையும் அங்கில்லை அந்தளவிற்கு வருமான வசதியும் இல்லை. இங்கேயே இருப்போம் என்றால் எனது வாழ்க்கை தனிமையில் முடியுமோ என்ற பயம். இவை இரண்டிற்கும் அப்பால் ஏதோ நாளும் பொழும் கடக்கிறது நானும் அதில் பயணிக்கிறேன்.


இதில் மேலும் படிக்கவும் :