ஒரு இளம் புரட்சிக்காரனின் காதல் கடிதம்....


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 28 செப்டம்பர் 2016 (14:47 IST)
சோவியத் யூனியனில் [இன்றைய ரஷ்யா] ’உல்லூபி புய்னாக்ஸ்கி’ என்ற இளம் கன்யூனிஸ்ட், தனது 15 வயதில் அரசுக்கு எதிரான உள்நாட்டு போரில் தீரமுடன் பங்கெடுத்து தாகிஸ்தான் கட்சி நிறுவனத்தின் தலைவராக மதிக்கப் பெற்றவர்.
 
 
தனது 29 வயதிலேயே எதிர் தரப்பு உளவாளியால் காட்டிக்கொடுக்கப்பட்டு துப்பாக்கி குண்டால் உயிரிழந்தார். அவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் வாசகர்களுக்காக...
 
அன்பார்ந்த தாத்தூ!
 
கடைசியில் உன்னை ஒருமையில் விளிக்க அனுமதி கொடு. இதுவரை நாம் ஒருவரையொருவர் “நீங்கள்” என்று பன்மையில் அழைத்து வந்தோமே, அதனால் சொல்கிறேன்.
 
என்னுடைய குறுகிய வாழ்க்கையை முடிந்தவரை பயனுள்ள விதத்தில் முன்னேற முயன்று வந்திருக்கிறேன். நான் நேர்மையற்றவனாகவும், கேடுகெட்ட குணங்கள் உள்ளவனாகவும் இருந்தேன் என ஒருவனும் சொல்ல மாட்டான். என்னைப் பற்றி அவதூறு கூற யாரும் துணிய மாட்டான். இதுவே எனக்குப் போதும்.
 
என் வாழ்க்கை எத்தகையதாய் இருந்தது? நான் சொல்வதை நம்பு; சின்னஞ்சிறிய வயது முதலே நான் களிப்பை அறிந்திருக்கவில்லை. உன்னுடைய புன்னகை.... இப்போது அஸ்தமன வேளையில் எனக்கு கதிரொளி கிடைத்துவிட்டதுபோல், தெளிந்த தூய வானம் என்னை நோக்கிப் புன்னகை புரிவதுபோல் இருக்கிறது.
 
என் கடிதத்துக்கு நன்றாக பதில் எழுதியிருந்தாய்: “நான்தான் உங்களை காதலிக்கிறேனே” என்று. எனக்கு இதுவே போதும். அந்த கணம் முதல் நான் இன்பத்தில் திளைக்கிறேன். ஆனால் பிரிவு, நிரந்தர பிரிவு நம் இருவரையும் இவ்வளவு விரைவில் வேறுபடுத்தி விட்டது. இதுதான் விதி போலும்!
 
நீ எப்போதும் போல துணிவும், உறுதியும் கொண்டிரு. நினைவு வைத்துக்கொள், நான் இல்லாவிட்டால் உலகம் வெறுமை ஆகிவிடாது! உறுதியாய் இரு. பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து ஒளிவீசும் வருங்காலத்தை நோக்கி நட.....
 
நீ என்னை உளமார காதலிப்பதாக இருந்தால் ஒரு சொட்டு கண்ணீர் விடாதே. கொடிய பகைவர்கள் நகையாட இடம் தராதே. உன் எண்ணங்கள் யாவற்றாலும் என்னைக் காதலித்தால், விழிகளைத் தாழ்த்தாதே. பகைவர்கள் எவனும் உன் பலவீனத்தை கண்டுகொள்ள விடாதே. மாறாக, உன் விழிகளின் மின்வெட்டைக் கண்டு ஒவ்வொருவனும் குற்றவாளி போல இருப்பு கொள்ளாமல் தவிக்கட்டும்.
 
நான் மன்னிப்பு கோரலாம் என வழக்கறிஞர் சொன்னார். என் அருமை தாத்தூ! நானா மன்னிப்பு கோருவேன்? ஒருபோதும் மாட்டேன். அப்படி செய்தால் நான் ‘உல்லூபி’ [அவரது பெயர்] என்று நீ ஒப்புக்கொள்ளவே மாட்டாய்.
 
ஆகவே, என் அன்பே, முன்னே பார்வையை செலுத்து. நீ உளமார நேசிக்கும் மக்களின் நன்மைக்காக வாழ்ந்திரு. அசட்டுத்தனம் எதுவும் செய்யாதே. நல்லது, விடை கொடு. தொலைவிலிருந்து உன்னை நெஞ்சார முத்தமிடுகிறேன்.
 
- உனது உல்லூபி.


இதில் மேலும் படிக்கவும் :