பேரரசர் அக்பரும்... தளபதி ஸ்டாலினும்...
பேரரசர் அக்பருடைய காலத்தில் பரித் என்ற பக்கீர் (மகான்) இருந்தார். அவர் ஒரு பரதேசியைப் போல சிறிய குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இருந்து அறிவு செல்வதை பேரரசர் அக்பர், பரித் பக்கீரின் குடிசைக்கு பல முறை சென்றது உண்டு.
ஒரு முறை பேரரசர் அக்பர் விலை உயர்ந்த பரிசு ஒன்றை பக்கீருக்கு வழங்க முடிவு செய்து தனது காசானாவில் இருந்து நவரத்தினக்கல் பதிக்கப்பட்ட தங்கத்தால் ஆன கத்திரிக்கோல் ஒன்றை பக்கீரின் குடிசைக்கு எடுத்து சென்று வழங்க முற்படுகிறார்.
ஆனால் பக்கீர் அதை ஏற்க மறுத்து சில குண்டூசிகளை கேட்கிறார். மா மன்னருக்கு ஒரே ஆச்சரியம்! ஏன் இந்த பக்கீர் கத்திரிக்கோலை மறுத்து குண்டூசிகளை கேட்கிறார் என்று. பேரரசர் அக்பர் பரித் என்ற பக்கீர் முன்பு மண்டி இட்டு அதற்கான விளக்கம் கேட்கிறார்.
அதற்கு பக்கீர் அளித்த பதில் கத்திரிக்கோல் என்பது ஒன்றை இரண்டாக்குவது. குண்டூசி இரண்டை ஒன்றாக்குவது. ஞயானம் என்பது இரண்டை ஒன்றாக்குவது. அங் ஞயானம் என்பது ஒன்றை இரண்டாக்குவது என்று சர்வ சாதாரணமாக பதில் சொல்லுகிறரர்.
தளபதி ஸ்டாலின் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம். அவருடைய உழைப்பு, கட்சிக்காக அவர் ஆற்றிய பணிகள், மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக அவருடைய பணிகள் மகத்தானவை. ஆனால் அவர் செல்லும் இடம் எல்லாம் கத்திரிக்கோலை எடுத்து செல்கிறார்.
அந்த கத்திரிக்கோல் வைகோவை கத்தரித்து. பிறகு அழகிரி, ராமதாஸ் பிறகு தொல். திருமாவளவன் என்று கடைசியாக திருநாவுக்கரசரில் வந்து நிற்கிறது. அக்னீ பரிட்சை நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், கலைஞர் எங்களை அரவணைத்து சென்றதைப் போல, எங்களுடன் களம் கண்டதைப் போல ஸ்டாலின் பக்குவம் பெறவில்லை என சுட்டி காட்டுகிறார்.
அதிமுகவை விட திமுகவை அதிகம் விமரிசித்து வரும் வைகோ கூட, அண்ணன் கலைஞர் என்று சொல்லியே விமர்சனம் செய்வார். 2004 பாராளுமன்ற மெகா கூட்டணியின் சமன்பாடுகள் எல்லாம் உடைக்கப்பட்டுவிட்டது. அரசியல் சதுரங்கம் மாற ஆரம்பித்து விட்டது.
டிஜிட்டல் வீயூகம் சக்கர வீயூகம் எல்லாம் தோற்று விட்டது. ஆகவே தளபதி அவர்களே செல்லும் இடம் எல்லாம் குண்டூசிகளை எடுத்து செல்லுங்கள் அது உங்களுக்கு மட்டும் அல்ல, கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது.